வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (07/01/2018)

கடைசி தொடர்பு:07:23 (08/01/2018)

பேரிகேடை இழுத்துச் சென்று அட்டகாசம் செய்த சென்னை இளைஞர்! -  பேஸ்புக் வீடியோவால் சிக்கிய பரிதாபம் 

peter

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக்கை அதிவேகமாக ஓட்டிசென்றது மட்டுமின்றி வாகனம் ஓட்டிக்கொண்டே பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகேடை இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

 

சென்னை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்றதால் காவல்துறையினர் பீட்டர் மற்றும் அவரது நண்பரை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பீட்டர், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகேடை வாகனம் ஓட்டிக்கொண்டே இழுத்துச் சென்றுள்ளார். போக்குவரத்து அதிகாரிகள் இந்தக் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை துரத்திச் சென்றனர். ஆனால், பீட்டர் அதிவேகமாக பைக்கில் பறந்துவிட்டார். இதையடுத்து காவல்துறை பீட்டர் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தானாக வந்து போலீஸ் வலையில் சிக்கியுள்ளார் பீட்டர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையில் போடப்பட்டிருந்த பேரிகேடை இழுத்துச் சென்றதை வீரசாகசம் போன்று தற்பெருமை பேசி, வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் பீட்டர். அந்த வீடியோவில் காவல்துறையை ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார். வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் சைபர் க்ரைம் அதிகாரிகள் உதவியுடன் பீட்டர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கைதுசெய்துள்ளனர் சென்னை போலீஸார்.  ’தவளை தன் வாயால் கெடும்’ என்பதற்கு பீட்டர் சரியான உதாரணம். பீட்டரை நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். பீட்டரின் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க