வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (07/01/2018)

கடைசி தொடர்பு:10:09 (07/01/2018)

’தாக்குதலில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து கொண்டேன்!’ - பஸ் ஓட்டுநர் பளீச்

மிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்கள் தொடர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அனுபவமில்லாத ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் தாறுமாறாக இயக்கப்படுவதால், பயணிகள் அலறுகின்றனர். இருப்பினும், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களிலும் ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபடாமல் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். 

அரசு பேருந்து ஓட்டுநர்

கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அரசுப் பேருந்து ஓன்று நேற்று புறப்பட்டது. பேருந்தை ஓட்டத் தொடங்கும் முன், டிரைவர்  சிவகுமார் செய்த காரியம்தான் பயணிகளை துன்பத்திற்கிடையேவும் சிரிக்க வைத்தது.  பேருந்து ஓடத் தொடங்கியதும் ஹெல்மெட் ஒன்றை எடுத்து அவர் தலையில் மாட்டிக் கொண்டதுதான் சிரிப்புக்கு காரணம். சிவகுமாரின் கடமை உணர்வை பயணிகள் மெச்சினர்.  ஹெல்மெட்டுடன்  பேருந்து ஓட்டிய அவரை  செல்போனில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால், மற்ற ஊழியர்கள் தன்னைத் தாக்கக் கூடும் என்பதால் ஹெல்மெட் எடுத்து மாட்டிக் கொண்டதாக சிவக்குமார் தெரிவித்தார். சமீபகாலமாக வேன், கார் ஓட்டுநர்களிடம்  கூட 'ஏன் ஹெல்மெட் அணியவில்லை' என்று கூறி டிராபிக் போலீசார் அபராதம் விதிப்பது வழக்கமாகி வருகிறது. இப்போது, பஸ் டிரைவரே ஹெல்மெட் அணிந்து விட்டார். இதைக் காரணம் காட்டி நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் டிராபிக் போலீசார் அபராதம் விதிக்காமல் இருந்தால் சரிதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க