வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/01/2018)

கடைசி தொடர்பு:16:30 (07/01/2018)

ராமநாதபுரத்தில் பேருந்து மீது கல்வீச்சு! - ஓட்டுநர், நடத்துனர் காயம்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 4 -வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. நேற்று இரவு அரசு பேருந்து மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் பேரூந்து மீது நடந்த கல்வீச்சில் காயமடைந்த ஓட்டுநர்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் 80 சதவிகிதத்துக்கு மேல் பணிமனைகளிலேயே முடங்கி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. சென்னை உயர் நீதிமன்ற எச்சரிக்கையையும் தொழிற்சங்கங்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இதனிடையே ஆங்காங்கே தனியார் பேருந்துகளைக் கொண்டும், தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு அரசு பேருந்துகளை இயக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் நிரந்தரம் ஆகாத பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வீச்சில் சேதமடைந்த ராமநாதபுரம் பேரூந்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளின் மூலம் 20 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தனியார் பேருந்துகளும் குறைந்த அளவே உள்ளதால், அவர்களாலும் பயணிகள் சிரமத்தைப் போக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு உத்தரகோசமங்கையில் இருந்து  ராமநாதபுரம் வந்த அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்ததுடன், ஓட்டுநர் பாரதியார் மற்றும் நடத்துனர் ஞானம் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து உத்திரகோசமங்கை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால் நாளையும், இந்தப் போராட்டம் தொடர்ந்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.