’அரசியலில் ஆன்மீகத்தைக் கலக்கக் கூடாது’ - டி.டி.வி.தினகரன் அதிரடி!

அரசியலில் ஆன்மீகத்தை கலக்காமல் அரசியல்வாதிகள் செயல்பட்டாலே பொதுமக்களின் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று டி.டி.வி.தினகரன் அதிரடியாக கருத்துத் தெரிவித்து உள்ளார்.

டி.டி.வி.தினகரன்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த டி.டி.வி.தினகரன், நேற்றிரவு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் தங்கினார். இன்று சென்னைக்குப் புறப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’சட்டமன்றக் கூட்டத் தொடரில் நான் பங்கேற்பேன். கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படுமானால் நிச்சயமாக எனது கருத்துக்களைத் தெரிவிப்பேன்.

கவர்னர் உரையில் என்ன அறிவிப்புகள் வெளியாகின்றன என்பதை எல்லாம் கவனமாகப் பார்த்து விட்டு அது குறித்துக் கருத்துச் சொல்வேன். திராவிட ஆட்சியில் ஆன்மீக அரசியலுக்கு இடமே இல்லை. திராவிட அரசியலில் மட்டும் அல்லாமல் உலகில் எங்குமே அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் கிடையாது. ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்டது..எனவே அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்தத் தொடர்புமே இருக்க முடியாது.. 

அரசியல்வாதிகள், மக்களின் மதநம்பிக்கைகள் குறித்தும் வழிபாட்டு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசாமல் இருப்பதே நல்லது. அரசியல்வாதிகள், மதத்தை கையில் எடுத்து மக்களை பிரிக்காமல் இருந்தாலே நாட்டில் இருக்கும் பாதிப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கத்தான் வேண்டுமே தவிர எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது. என்னைப் பொறுத்தவரையிலும், ஆன்மீகத்தை அரசியலோடு கலக்கக் கூடாது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி விடும்’’ என்றார் அழுத்தமாக.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!