வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (07/01/2018)

கடைசி தொடர்பு:16:06 (07/01/2018)

'படிப்பு இல்லைனாலும் நாங்க சம்பாதிக்குறோம்!' - மெர்சல் காட்டும் மகளிர் சுய உதவிக்குழு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில், மாவட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் இதில் கலந்துகொண்டு தங்களது குழுவினர் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

krishnagiri

மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் சாலை வசதிகளுடனும், மின்விளக்கு வசதிகளுடனும் இருந்தாலும்கூட கிராமங்கள் பின்தங்கியுள்ளன. எனவே அங்குள்ள கிராம பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு தங்களின் குடும்பத்தினை ஒரு படியேனும் உயர்த்திட முனைந்து, கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலில் ஈடுபடுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றே கூறலாம்.

a

கலர் கலராக மேடையை அலங்கரிக்கும் சிறு பொம்மைகள் செய்யும் செல்வியிடம் இதுகுறித்து பேசினோம் "பல்வேறு கலாச்சாரத்தை வலியுறுத்தும் வகையில் ஆண் பெண் பொம்மைகள் நாங்கள் செய்கிறோம். ரொம்ப துள்ளியமான வேலைங்க இது. பொம்மைக்கு சரியாக பெயின்ட் அடிக்கனும்,அதற்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்வோம். ஆண்களுக்கான சட்டைகள், பெண்களுக்குப் புடவைகள், என தனித்தனியே தைப்போம்.பிறகு ஆடை அலங்காரங்கள் செய்து ஒரு  பொம்மையை செய்து முடித்தால்தான் எங்களுக்கு முழு திருப்தி" எனப் புன்னகை மாறாமல் பேசுகிறார்.

a

"படிப்பல்லாம் ஒன்னும் பெருசா படிக்கல சார், மகளிர் திட்டம் மூலமா தான் நாங்க லோன் வாங்கி இந்த டெடிபியர் பொம்மைகள் செய்யுறோம்.படிப்பில்லைன்னாலும் நாங்க நல்லா சம்பாதிக்குறோம். குடும்பத்துக்கு நல்ல வருமானம் வருது. எங்க பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்குறோம். குடும்பம் சந்தோசம் போதுங்க" என்று வெற்றிக் களிப்புடன் பேசுகிறார் சுகுணா.

a

கையுரை மற்றும் காலுறை ஒரு பிரிவில் தென்பட்டதையடுத்து அங்கு சென்று பேசினோம், "நிறுவனங்களுக்கு நாங்க தயாரித்து அனுப்பும் கையுறைகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கு" என்று சொல்கிறார் பாரதி.

இங்கு பல்வேறு விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாசி மணிகள்,பேப்பர் கம்மல், புடவைகள்,உலர் பழங்கள், நொறுக்கு தீனிகள், வாசனை திரவியங்கள்,இயற்கை வேளாண்மைக்கு தேவையான உரம்,வேளாண் பொருட்கள், கூடைகள் இன்னும் பல. உங்களின் உழைப்பும் முயற்சிகளும் தொடரட்டும்!