வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/01/2018)

கடைசி தொடர்பு:18:30 (07/01/2018)

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு எதிரொலி! அமைச்சர் தலைமையில் அவசர ஆய்வுக் கூட்டம்

விவசாயிகளுக்கு வர வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக சிவகங்கை மாவட்ட விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். இதே காரணத்துக்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தையும் விவசாயிகள் நடத்தவிடாமல் செய்யவே, அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதோடு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் அறிவித்தனர். 

இந்த நிலையில், பயிர்காப்பீட்டுத் திட்டம் குறித்து அமைச்சர் தலைமையில் அவசர, அவசரமாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசினோம், "சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் ,கலெக்டர் லதா ஆகியோர் தலைமையில்  பிரதமரின் பயிர்காப்பீடு குளறுபடிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தில் கடந்தாண்டு நெல் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு ரூ.236.49 கோடி இன்சூரன்ஸ் பணம் பெறப்பட்டு, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மிளகாய் பயிர் காப்பீட்டு தொகையாக ரூ10.6 கோடி இழப்பீடு பெறப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், காளையார்கோயில் தாலுகாவில் உள்ள புலியடிதம்பம் கூட்டுறவு வங்கியில் விடுபட்ட 1,024 விவசாயிகளுக்கு ரூ3.19 கோடி காப்பீட்டுத் தொகை மாவட்ட நிர்வாகத்தால் பெறப்பட்டு, கூடிய விரைவில் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும். சென்ற வருடம் பாண்டியன் கிராம வங்கி  மற்றும் இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து விடுபட்டுள்ள 1,228 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை  கிடைக்கப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்திய 13,400 விவசாயிகள், இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் பாஸ்கரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளார், இதுகுறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது டி.ஆர்.ஓ இளங்கோ, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் செல்வம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் திலீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் விவசாயிகள் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில். நாளை நடக்க இருக்கும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் அரசிற்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க