வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (07/01/2018)

கப்பல் மூலம் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுங்கள்! உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த அகதிகள்

 

மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் இலங்கை செல்ல விரும்புபவர்கள் குறித்து விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம், இலங்கைக்கு கப்பல் மூலம் செல்ல அகதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் விசாரணை செய்த மத்திய குழு

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பல லட்சம் தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 107 முகாம்களில் 19,200 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தநிலையில், அகதிகளாக வந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இலங்கைக்கு திரும்பி சென்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,700 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த ஆண்டு இலங்கை திரும்ப 800-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில்  550 குடும்பங்களை சேர்ந்த 1,800 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம், மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இன்று விசாரணை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசந்த் ஜித் தேவ், சதீஷ்குமார் சிங், ஶ்ரீனிவாசன் மற்றும் தமிழக மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் தியாகராஜன் ஆகியோர் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம், இலங்கைக்கு திரும்பி செல்வது குறித்தும், முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு செய்து தரப்படும் உதவிகள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது மண்டபம் முகாமில் தங்கியுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களை விமானம் மூலம் அனுப்பினால் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல முடியாது. எனவே கப்பல் மூலம் இலங்கை திரும்ப ஏற்பாடு செய்தால் அங்கு செல்ல தயாராக இருப்பதாக விசாரணை குழுவிடம் தெரிவித்தனர். மற்றவர்களோ, இன்னும் அங்கு நிரந்தரமாக அமைதி திரும்பவில்லை. மேலும் போதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. எனவே இலங்கை செல்ல விருமவில்லை என்றும், முகாமில் தங்கியுள்ள தங்கள் குடும்பத்து படித்த இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதன் பின்  மத்திய அரசு அதிகாரிகள் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள மருத்துவமனையைப் பார்வையிட்டனர். இந்த விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துமாரி, கோட்டாட்சியர் பேபி, அகதிகள் மறுவாழ்வு முகாம் தனித் துணை ஆட்சியர் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.