``சில சமயம் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்பதே புரியவில்லை!” - பிரசாந்த் பூஷன்

prashant bhushan, பிரஷாந்த் பூஷன்

பிரஷாந்த் பூஷன். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். ஊழல் எதிர்ப்பு இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், பொதுநல வழக்குகள் என்று இவர் மேற்கொண்ட செயல்களால் பெரிதும் அறியப்படுபவர். சென்னை ஐ.ஐ.டி-யின் 'சாஸ்திரா' நிகழ்ச்சியில் பங்குகொண்ட இவர், அரசியல் குறித்தும், மக்கள் நல மேம்பாடு குறித்து உரையாற்றினார். ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது, கல்வியில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக உரையாற்றிய அவர், மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். அந்த நேர்காணலின் தொகுப்பு இது...

“இந்திய நீதித்துறை இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்று நீங்கள் நினைப்பது என்ன?”

“நீதி என்பது இன்னும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. காரணம், இன்றும் சாமான்ய மக்கள் பலரும், வழக்கறிஞர்கள் வைத்து வாதாடும் அளவுக்கு வசதி இல்லாதவர்களாகவே உள்ளனர். பொருளாதார வசதிகள் அற்ற ஒரு விளிம்புநிலை மனிதனின் மீது ஒரு தவறான குற்றம் சாட்டப்படும்போது, அவர் தனக்குச் சாதகமாக வழக்காடும் நிலையில் இருப்பதில்லை. ஆகையால், அவர் தன்னைவிட உயர்நிலையில் இருப்பவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் நிலையிலேயே உள்ளனர். அதனால், சிறிய வழக்குகளுக்கு, பாமர மக்கள், வழக்கறிஞர்கள் இல்லாமல் தங்கள் வாதங்களை முன்வைப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதைப்போலவே, தீர்ப்புகளும் விரைவாக அளிக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, நீதியரசர்கள் தேர்வுசெய்யப்படும் முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். 'நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது முறைசெய்யப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மை வேண்டும்', என்று நாங்கள் நீண்ட நாள்களாகக் கூறி வருகிறோம். ஒரு நீதியரசர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டால், நடைமுறைக்குச் சிக்கலான கண்டனத்தீர்மானம் மட்டுமே கொண்டுவரமுடியும். ஆதலால், இதுபோன்ற செயல்களை ஆய்வு செய்வதற்கு என்று தன்னாட்சியான நிறுவனம் ஒன்றை அமைத்தால் பொருத்தமாக இருக்கும்."

"தனிநபர் உரிமையையும், ஆதார் எண் குறித்து என்ன கருதுகிறீர்கள்?"

“ஆதார் எண் என்பது அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சரியாகச் சென்று சேர்கிறதா, என்பதைச் சரிபார்க்க உதவும் ஒரு கருவி. அதற்கான முக்கியத்துவம் அவ்வளவுதான். தனிமனிதரின் எல்லா அடையாளங்களையும் அரசு சேர்த்துவைப்பது சரியல்ல. அதைப்போலவே, நாம் கொடுக்கும் தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. தனிமனிதனின் வங்கிக்கணக்கு எண், கைரேகை, கருவிழி அமைப்பு என்று அனைத்து தகவல்களையும் நூறுகோடி மக்களுக்கும் பாதுகாப்பாக சேமித்து வைப்பது சாத்தியமா என்று தெரியவில்லை."

பிரஷாந்த் பூஷன், prashant bhushan

“தீர்ப்புகள் உரிய காலத்தில் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?”

“நீதி விரைந்து அளிக்கப்படவேண்டும் என்றால், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். 12 சிறப்பு நீதிமன்றங்கள் இன்று உள்ளன. மேலும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும், அதன் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தினால், அதிகப்படியான மக்கள் பயன்பெறுவார்கள். 

“தீர்ப்புகளின் உண்மைத்தன்மைகளை ஆராய்வதற்கு, தன்னாட்சியான நிறுவனம் அமைக்கப்படவேண்டும் எனில், அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?"

"சில சமயம் வழங்கப்படும் தீர்ப்புகள் என்ன கூற வருகின்றன என்பதே புரியாத அளவுக்குக் குழப்பமாக வழங்கப்படுகின்றன. ஆனால், அதே சமயத்தில், ஊழல், தங்கள் கடமைகளில் இருந்து மீறுதல் (நீதிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குதல், கையூட்டு ஆகியவையும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன). ஆதலால், நீதியரசர்கள் குறித்த வழக்குகளைக் கையாள்வதற்குத் தன்னாட்சியான நிறுவனம் அமைப்பது மிகவும் அவசியமான ஒன்று".

“NOTA வேட்பாளர்களைவிட அதிகமாக வாக்குகளைப் பெற்றாலும், வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்றது. இதுபோன்ற நிலையில், மறுதேர்தல் என்பது சரியான தீர்வாக இருக்குமா?"

"இதுவரை நோட்டா அதிக வாக்குகள் பெற்றது இல்லை. யார் வெற்றி பெற வாய்ப்புள்ளவரோ, அவருக்கு வாக்களிக்கும் பழக்கம் நம்மக்களிடையே உண்டு. 'நோட்டா' வெற்றிபெறும் என்று வாக்காளர்கள் யோசிக்காததும் ஒரு காரணம். ஆதலால், மறுதேர்தல் என்பதைவிட, தேர்தலில் அடிப்படைச் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதும், சில சட்ட மசோதாக்களுக்குப் பொதுவாக்கெடுப்பு நடத்துவதும்  ஜனநாயகத்தை முன்னேற்றும்."

"பஞ்சாயத்து நிர்வாகங்களில் எத்தகைய சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்?"

"மொத்த அதிகாரமும் மத்திய அரசாங்கத்திடம் மட்டும் குவிந்திருக்கக் கூடாது. மாநில அரசுக்கான உரிமையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். அந்த உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது. அதேபோல மாவட்ட ரீதியிலான உரிமைகள், பஞ்சாயத்து நிர்வாகங்கள் சார்ந்த உரிமைகள் என தலையிடல் இல்லாத சில அதிகாரங்கள் பகிர்ந்துகொடுக்க வேண்டும்."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!