காரைக்குடி நகராட்சியில் எழும் கோரிக்கை..!

சங்கராபுரம் ஊராட்சியை, காரைக்குடி நகராட்சியுடன் இணைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துவருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சி இருந்துவருகிறது. மாவட்டத் தலைநகர் சிவகங்கையாக இருந்தாலும் காரைக்குடி அசுரவேகத்தில் வளர்ந்து வரும் நகரமாக மாறியிருக்கிறது. இங்கு எல்லா வகையான வசதிகளும் அமைந்துள்ளன. நிர்வாக வசதிக்காகவும் வருவாயைப் பெருக்கவும் காரைக்குடி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து சங்கராபுரம் ஊராட்சியைச் சேர்க்க வேண்டும் என்று சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டுகள் வரையறை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்த ஊராட்சியை, காரைக்குடி நகராட்சியோடு இணைக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் கனவாக இருக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதனிடம் பேசும்போது, 'காரைக்குடி நகராட்சிக்குள் இருக்க வேண்டிய அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலகம், ஆவின் போன்ற அலுவலகங்கள் சங்கராபுரம் கிராமப் பஞ்சாயத்தில் அமைந்துள்ளன. அதுபோக வட்டாரப் போக்குவரத்துக்கான அலுவலகம், பத்திரபதிவு துறை அலுவலகம் எல்லாம் இந்த ஊராட்சிக்குள் அமைய இருக்கிறது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருக்கிறது. ஊராட்சிக்கான நிதியை வைத்து அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், ரோடு, சுகாதாரம் போன்ற எதுவுமே செய்யமுடியவில்லை.

இவ்வளவு பெரிய ஊராட்சிக்கு ஒரே ஒரு கிளார்க் இருக்கிறார். இங்கு இருக்கும் பதினைந்து வார்டுகளும், காரைக்குடி நகரை ஒட்டியே அமைந்துள்ளன. ஆகையால், வார்டுகள் மறு வரையறை செய்யும் பணி 12.01.2018-ம் தேதி வரை நடக்க இருப்பதால் சங்கராபுரம் ஊராட்சியை காரைக்குடி நகராட்சியோடு சேர்க்க வேண்டும்.

இதுகுறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி நகல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காரைக்குடிக்கு வரக்கூடிய திட்டங்கள்  வராமல் இருப்பதற்கு சங்கராபுரம் ஊராட்சியை இத்தோடு இணைக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. காரைக்குடி நகருக்குள் அமைய இருக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டம் சங்கராபுரம் ஊராட்சியை சேர்க்காதவரை முழுமையடையாது. காரைக்குடியின் எதிர்கால வளர்ச்சியே சங்கராபுரத்தை நம்பியிருக்கிறது” என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!