வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:08:34 (08/01/2018)

மீசையைக் கொண்டு 600 கிலோ ஆட்டோவை இழுக்கும் சாகசக்காரர்..!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் அருகே, தன் மீசை முடியால் 600 கிலோ எடையுள்ள ஷேர் ஆட்டோவை 25 மீட்டர் இழுத்து சாதனை புரிந்துள்ளார். இதுபோன்று 75 சாதனைகளைச் செய்தும் தன்னுடைய கிராமத்தைத் தாண்டி சாதனைகள் வெளியில் தெரிவதில்லை என்று வருத்தப்படுகிறார் அந்தச் சாதனையாளர்.

அந்த சாதனையாளரிடம் பேசியபோது,  ''என் பேரு நடராஜ். என் மனைவி பெயர் சரஸ்வதி. எங்களுக்கு தேவிப்பிரியா, செளந்திரராஜன் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அத்தனூரில் குடியிருக்கிறோம். நான் சின்ன வயதாக இருக்கும்போதே ஏதோ பிறந்தோம், செத்தோம் என்று இல்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


அதையடுத்து, 14 வயதில் இருந்து கராத்தே, யோகா, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், ஜிம் என வீர விளையாட்டுகள் முழுவதையும் கற்று கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினேன். நான் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். என் சாதனைகளுக்காக பணம் செலவு செய்ய முடியாது.
ஆனாலும், என்னுடைய சாதனைகளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று பலரின் உதவிகளை நாடினேன். யாரும் எனக்கு உதவிகள் செய்ய முன் வரவில்லை. அதையடுத்து, கடந்த 2000 ஆண்டில் இருந்து சாதனைகள் 100 என்ற சிந்தனையோடு பொதுமக்கள் முன்னிலையில் மாதம் ஒரு சாதனைகளை செய்துவருகிறேன். பற்களால் டிராக்டர், மினி பஸ் இழுத்தது, தலை முடியால் பொலிரோ, ஆம்னிவேன் இழுத்தது, மூக்கால் முனிடோர், டாடா சுமோ தள்ளியது. காது மடல்களால் 8 கிலோ எடை கற்கள் தூக்கியது.
குரல்வளையால் டவேரா கார் இழுத்தது. நெற்றியில் 4,000 கிலோ எடையுள்ள மகேந்திரா வேன் தள்ளியது, கட்டை விரலால் ஆம்னி வேன், மினிடோர் வேன் இழுத்தது. 150 முறை கை விரல்கள்மீது ஆம்னி வேன் ஏற்றியது என 75 சாதனைகள் செய்திருக்கிறேன். இன்று 76-வது சாதனையாக மீசை முடியால் 600 கிலோ எடையுள்ள ஷேர் ஆட்டோவை 25 மீட்டர் இழுத்திருக்கிறேன். நான் மட்டுமல்லாமல் என் குழந்தைகளும், மனைவியும் பல சாதனைகள் செய்திருக்கிறார்கள். எங்க கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தமிழர்களின் வீரக் கலைகளைச் சொல்லிக் கொடுக்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிசய பிறவி என்ற அமைப்பு தொடங்கி வீரக்கலைகளை கற்றுக் கொடுத்து அவர்கள் சென்னை பெருநகர் வரை சென்று பல சாதனைகளைப் புரிந்து பல ஆட்சியாளர்களிடம் விருதுகளை வாங்கி இருக்கிறார்கள்.
என்னுடைய நோக்கம் என்னுடைய சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். ஆனால், அவர்கள் இங்கு வந்து சாதனையை பார்த்துப் பதிவு செய்வதற்கு 13 லட்சம் செலவாகுமாம். அதற்கான தொகை என்னிடம் இல்லை. யாராவது உதவி செய்தால் நான் கின்னஸில் இடம் பெற்று விடுவேன். தற்போது என் சாதனைகள் அனைத்தும் இந்தக் கிராமத்தோடு நின்று விடுகிறது. நிச்சயம் எனக்கு உதவி கிடைக்கும். என் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும்'' என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க