போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இதுதான் ஒரே வழி! - கொதிக்கும் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை, எத்தனை நாள்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 


ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தடை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் எச்சரிக்கை போன்றவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல், பணிமனையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. 

இந்தநிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அவர்கள் கூறுகையில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளை அன்றாடம் பராமரித்தால் மட்டுமே அவற்றை இயக்கமுடியும். அன்றாடம் இயக்கி நல்ல பயிற்சி பெற்றவர்களால்தான் அந்தப் பேருந்துகளை இயக்கமுடியும். இன்றைய சூழலில் போக்குவரத்துப் பணிமனைகளில் பேருந்துகளைப் பராமரிக்க தொழில்நுட்பப் பணியாளர்கள் யாருமே இல்லை. ஆகவே, பழுதுபார்க்கப்படாத பேருந்துகளைப் பயிற்சியற்றவர்கள் மூலம் இயக்கி, பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் பணியை அரசாங்கமே செய்துகொண்டிருக்கிறது. இது கடுமையான கண்டனத்துகுரியது. அமைச்சரே பகிரங்கமாக, ’’வண்டி ஓட்டத் தெரிந்தவர்களெல்லாம் வாருங்கள்’’ என்று அழைக்கிற காட்சியைப் பார்க்கிறோம். இப்படி பல்வேறு விஷயங்களில் அரசே அத்துமீறி வருகிறது. 

ஆனால், தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பல ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால், இதற்கு மேல் பொறுக்க முடியாது, நமது முதுகுக்குப் பின்னால் ஒரு துரோக ஒப்பந்தத்தைச் செய்கிறார்கள் என்ற சூழலில்தான், நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். அதைக் குற்றம் என்று சொல்லக் கூடியவர்கள், பொதுமக்கள் உயிரைப் பணயம் வைத்து குற்றம்புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். மற்ற துறைகளுக்கு இணையான ஊதிய உயர்வு, அதாவது 2.57 மடங்கு உயர்வை அளிக்க அரசு முன்வர வேண்டும். எங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வைப்பு நிதியிலிருந்து அரசு எடுத்த 7,000 கோடி ரூபாயைத் திரும்ப அளிக்க வேண்டும். இதுதான், போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உருப்படியான தீர்வு என்பதைக் கூட்டுக்குழு உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை, எத்தனை நாள்கள் ஆனாலும் போராட்டம் தொடரும்’ என்றனர் காட்டமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!