வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (07/01/2018)

கடைசி தொடர்பு:11:17 (08/01/2018)

``51 பேர் சொல்வதை 49 பேர் கேட்க வேண்டும் என்பதே ஜனநாயகம்” - மோடியை விமர்சித்த பழ.கருப்பையா

பழ கருப்பையா, pazha karuppaiah

ஸ்லாமிய ஷரீஇத் சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் திருவாரூரில் கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2018) மாலை நடைபெற்றது. பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் இறுதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா உரை ஆற்றினார்.

"மோடி கூட்டியது இந்தக் கூட்டம்.  இனத்தால், மொழியால் நாம் தமிழர்களாக இருப்பினும், நாங்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்ல வேண்டிய நிலையை இவர்கள் உருவாக்குகிறார்கள். இந்துக்களுக்கான மணமுறிவுச் சட்டத்தை முன்னாள் பிரதமர் நேரு அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்தார். ஒருவேளை அதில் மாற்றங்கள் வேண்டுமெனில் அடுத்து வருபவர் மாற்றமுடியும். ஆனால், இஸ்லாமியர்களுக்கான சட்டத்தை உருவாக்கினால் அதை மாற்ற அவர்களிடம் பெரும்பான்மை பிரதிநிதிகள் இல்லை.

ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. 51 பேர் சொல்வதை 49 பேர் கேட்கவேண்டும் என்பதே ஜனநாயகம். சிறுபான்மை மக்களுக்காக பலபோராட்டங்களை முன்னெடுத்தார் காந்தி. முரட்டுத்தனமாக செயல்படும் மோடி அவசரம் அவசரமாக புதிய சட்டத்தைக் கொண்டு வர முயலுகிறார். இஸ்லாம் அடிப்படையிலேயே தனித்தன்மை வாய்ந்தது. மொராக்கோ முதல் சீனா வரை, திருவாரூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை எல்லாரையும் ஒரே சட்டம் ஆள்கிறது, ஒரே 'குர் ஆன்' கட்டுக்குள் வைக்கிறது.  இஸ்லாமியர்கள், பண்பாட்டால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொழுகை, பண்பாடு, சமூக நடைமுறைகளை இன்று வரை அப்படியே கடைபிடித்து வருகிறது இஸ்லாம். அதில் எப்படி சட்டம் போட்டு மாற்றம் கொண்டுவரமுடியும். நபிகள் சொல்லாத செய்திகளே கிடையாது.

pazha karuppaiah, பழ கருப்பையா

'குர்ஆன்' என்பது மாற்றத்திற்குட்படாதது. ஏனெனில், 'குர்ஆன்' அல்லாவின் வார்த்தை. இஸ்லாமியத்தில் எல்லாமே ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. நபிகள் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளை உருவாக்கித் தந்தார். அதில் மாற்றம் செய்வதற்கு மோடி யார்?. தன் புகழைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தவர் நபிகள். நபிகள் இறந்தபின், அபுபக்கர் சொல்லுகிறார்:

"நபிகள் இறந்து விட்டார்
அல்லா இறப்பற்றவன்
அல்லாவே வணக்கத்திற்குரியவன்

ஒட்டகத்திலும், போரில் இருக்கும்போதும், தொடர்வண்டியிலும் இருந்துகொண்டே தொழுகை செய்யலாம் என்றிருக்கும்போது, கீழத்தெருவைச் சேர்ந்த ஒருவனும், மேலத்தெருவைச் சேர்ந்த ஒருவனும் ஏன் பள்ளி வாசலுக்கு வரவேண்டும். முகமதுவும், அகமதுவும் இணைந்து அமைப்பாக உருவாக வேண்டும் என்பதே நபிகள் விருப்பம். இஸ்லாமியர்களின் ஐந்து கட்டளைகளில் மிக முக்கியமானது, மெக்கா சென்று வருதல். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதுபோல, கீழத்தெருவும், மேலத்தெருவும் இணைவது போதாது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒருவனும் இங்கே திருவாரூரில் உள்ள ஒருவனும் இணைந்து மொழி, இனம், எல்லை என எல்லாவற்றையும் தாண்டி ஒருமை உணர்வை உருவாக்கித் தருகிறது.

ஏழைக்குத் தானம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்று பிற மதங்கள் சொல்லும். ஆனால், கொடுக்காவிட்டால் ‘பாவம்’ என்று எந்த மதமும் சொல்லவில்லை. ஆனால், கையில் இருக்கும் நாற்பது ரூபாயில் ஒரு ரூபாயை பிறருக்குத் ‘ஜகாத்’ தரவேண்டும் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ‘அப்படி ‘ஜகாத்’ தரவில்லையென்றால் நீ இசுலாமியனே கிடையாது', என்று விதிக்கிறது இசுலாம். கடவுள் விரும்பாத சொல் 'தலாக்' என்று சொன்னவர் நபி. இருப்பினும் வழியில்லாது வாழ்வதைவிட பிரிவது நல்லதென எண்ணிக் கொண்டுவந்தார்.

பழ கருப்பையா, pazha karuppaiah

ஆனால், மணமுறிவுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது, மூன்றாண்டு சிறை தண்டனை என்பதெல்லாம் இஸ்லாமியத்தில் இவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஜீவனாம்சம் என்கிற முறை இஸ்லாமியத்திற்கானதல்ல. 'மகர்' முறைதான் இஸ்லாமியத்திற்கானது. (மகர் முறை என்பது இஸ்லாமிய மணமகன் திருமணம் செய்யும்போது, மணமகளுக்கு குறிப்பிட்டத் தொகை கொடுத்து உடன்வாழ்வேன் என்பதனை வலியுறுத்தும் ஓர் உடன்படிக்கை). ஒருவேளை மணமுறிவுக்குப் பின் ஜீவானாம்சம் பெற்றுக்கொண்டே வந்தால், அடுத்த திருமணத்துக்கு அது தடையாக இருக்கும் என்பதாலே அது இஸ்லாமியத்தில் இல்லாமல் உள்ளது. இந்தக் 'குர் ஆன்' இல் மாற்றம் கொண்டுவர மோடி யார்? 

'நிக்காஹ் ஹலாலா' என்கிற முறை உண்டு. ஒருமுறை தலாக் சொல்லிப் பிரிந்த இல்லற இணை, மனம் வருந்தி திருந்தினால்கூட மீண்டும் உடனடியாக இணைய முடியாது. வேறொருவருடன் இணைந்து வாழ்ந்து தலாக் சொல்லிப் பிரிய வேண்டும். அதற்குப் பின்னர், முன்னர் இணைந்ததைப் போல அத்தம்பதிகள் இணைய வேண்டும். இந்த 'நிக்காஹ் ஹலாலா' என்பது எளிதில் தலாக் செய்யக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட சிந்தனை ரீதியிலான முறை. 

ஆக, “இஸ்லாமியத்துக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களும் அதற்குள்ளேயே இருக்கிறது. அதிலே மாற்றம் செய்ய இவர்களால் முடியாது. மீண்டும் நபிகள் பிறந்து வந்து மாற்றினாலே உண்டு” என்று பழ.கருப்பையா தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்