வெளியிடப்பட்ட நேரம்: 23:05 (07/01/2018)

கடைசி தொடர்பு:23:05 (07/01/2018)

’’பணம் வென்று, மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்!’’ - நல்லகண்ணு வேதனை

திருப்பூரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் 3-வது மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான ஆர். நல்லகண்ணு தொடங்கிவைத்தார். 

அப்போது பேசிய அவர், " போக்குவரத்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த ரூ.7,000 கோடியை அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்டார்கள். இன்றைக்கு அந்த தொழிலாளர்களின் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. உருவான தருணத்திலேயே தடை செய்யப்பட்ட கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மேலும், 11 ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று சொல்லக்கூடாத நிலையும் நீடித்தது.  ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் சாதி, மத அடிப்படையில் மக்கள் பிளவுபட்டு கிடந்தார்கள். தொழிலாளர் வர்க்கம் வஞ்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டுக்கு முடிவு கட்டவே இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடங்கப்பட்டன.

விவசாயமும், கைத்தறியும் மட்டுமே அன்றைக்கு தொழில்களாக இருந்தன. உணவுக்கு விவசாயம் என்றும், உடைக்கு கைத்தறி என்றும்தான் அந்தக் காலம் இருந்தது. கட்சியின் கொள்கை, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை முன் வைத்தே அன்றைக்கு அரசியல் பிரசாரங்கள் இருந்தன. அதில் சுதந்திரப் போராட்ட தியாகியான ராமமூர்த்தி உள்பட பலர் சிறையில் இருந்தவாறே தேர்தலில் வெற்றி பெற்றனர். இன்றைக்கு பணம் கொடுப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டிருக்கிறது. பணம் வெற்றி பெற்று மக்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழல், லஞ்சம் போன்றவை ஜனநாயகத்துக்கு பெரும் கேடாக அமைந்திருக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு பேராபத்தில்தான் முடியும். போராடிப் பெற்ற ஜனநாயகம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை’’ என்றார்.