வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (07/01/2018)

கடைசி தொடர்பு:14:25 (08/01/2018)

கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு ஒழிப்புகுறித்து கலெக்டர் ஆய்வு!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அதிகாரிகளிடம் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். 

ஆட்சியர் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் வளாமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கி வருகிறார். வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் சுகாதாரத்தைப் பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். 

இந்த நிலையில், கடையநல்லூர் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று ஆய்வு மேற்கொண்டார். கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள 28 முதல் 30 வரையிலான வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் அயூப்கான், பொறியாளர் கிறிஸ்டோபர், நகரமைப்பு ஆய்வாளர் சேக்மைதீன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டார்.

பின்னர், ஒவ்வொரு அலுவலரும், டெங்கு பாதிப்பு உள்ள இடங்கள் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் சென்று பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அதிகாரிகள் சிறப்புக் கவனத்துடன் மூன்று நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொசு புழுக்கள் உற்பத்தி ஆகிறதா என்பதைக் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அலுவலர்களுடன் ஆட்சியர்

தன்னார்வ அமைப்பினர் பொதுமக்களிடம் டெங்குக் காய்ச்சல் குறித்த தகவல்களை எடுத்துக் கூறி கொசு ஒழிப்புப் பணியில் பொதுமக்களையும் ஈடுபடுத்த வேண்டும். அத்துடன், வீடுகளில் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுப் பணியில் ஈடுபடும்போது அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே டெங்கு பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும்’’ என்றார். இந்த ஆய்வின்போது தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், பூச்சியியல்துறை வல்லுநர் ராமலிங்கம், நகர்நல அலுவலர் டாக்டர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சேகர், சக்திவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.