வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:10:46 (08/01/2018)

சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகிறார், சூழலியல் போராளி முகிலன்!

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு லட்சம் பேர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி, பாளையங்கோட்டை சிறையில் உள்ள முகிலன் நாளை  முதல் உண்ணாவிரதம் தொடங்க உள்ளார்.

முகிலன் உண்ணாவிரதம்

கூடங்குளம் அணு உலை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவர், முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மணல் கொள்ளை, கனிம வளச் சுரண்டல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் முகிலன். நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, முகிலன் மீது போடப்பட்ட வழக்குகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த நவம்பர் 28-ம் தேதி வள்ளியூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதியிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் அளித்தார். அதில், தன் மீதான வழக்குகளில் அரசுத் தரப்பு பல்வேறு குறைபாடான ஆவணங்களை வழங்கி இருக்கும் விவரங்களைச் சுட்டிக் காட்டி இருந்தார். 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை காஷ்மீரில் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கையை நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவிப் பொதுமக்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஒரு லட்சம் பேர் மீது 132 வழக்குகள் போடப்பட்டு இருப்பதை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் பாளையங்கோட்டை சிறைக்கு உள்ளேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார். 

முகிலன்

கூடங்குளத்தில் அப்பாவி மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். ஜல்லிகட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அத்துடன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், கெயில் குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள், ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், மணல் கொள்ளைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ஆகியவற்றை திரும்பப் பெறும் வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள முகிலன், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனவரி 8-ம் தேதி தொடங்குகிறார்.