வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:01:30 (08/01/2018)

`அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான வேலை ஆரம்பிக்கப்படாவிட்டால்...' - அரசை எச்சரிக்கும் போராட்டக்குழு

பிப்ரவரி மாதத்துக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்காவிட்டால், பிப்ரவரி 8-ம் தேதி அவிநாசியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அத்திக்கடவு போராட்டக்குழு அறிவித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வருடம் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீரை மின் மோட்டார் மூலம் குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் இதற்கு ரூபாய் 1,516 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் அறிவித்துவிட்டுச் சென்றார். ஆனால் தற்போது வரையிலும் திட்டம் தொடர்பான எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் பணிகளை தமிழக அரசு தொடங்கவில்லை என்றால், பிப்ரவரி 8-ம் தேதி அவிநாசி பகுதியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இப்போராட்டத்தில் மூன்று மாவட்ட விவசாயிகளும் கலந்துகொள்வார்கள் என்றும் போராட்டக்குழு அறிவித்திருக்கிறது.

திருப்பூர், கோவை  மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் கடந்த 60 ஆண்டுகால கோரிக்கையாக அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் இருக்கிறது. இத்திட்டம் மூலம் 71 குளங்கள், 630 குட்டைகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.