வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:10:11 (08/01/2018)

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை... கிராமமே ஒப்பாரிவைத்து அழுகை!

மதுரை தொந்திலிங்கபுரம் கிராமத்தில் இருந்த ஜல்லிக்கட்டு காளையின் உயிரிழவுப்பு, அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு

மதுரை  மேலூரை அடுத்த  தொந்திலிங்கபுரம் கிராமத்தில், கல்லுக்கட்டி கருப்பணசாமி கோயிலுக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டு காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிறாவயல் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கக்காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருள்களைப் பெற்று வெற்றிவாகை சூடி வந்தது. அதனால், தொந்திலிங்கபுரம் கிராமத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது. சீண்டும் நபர்களிடம் முரட்டுக்காளையாகவும், பாசம் காட்டும் நபர்களிடம் பச்சைக்குழந்தையாகவும் பழகியது. மேலும்,
அந்த ஊருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்துள்ளது.

 

 

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அதிக குளிர் காரணமாக காளை நோய்வாய்ப்பட்டிருந்தது. அதற்குப் பின், மருத்துவர்கள் உதவியோடு பலகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், காளையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணவில்லை. இதனால், திடீரென்று காளை நேற்று உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து, காளையின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மலர்களால் அலங்கரித்து ஊர் மந்தையில் வைத்தனர். ஊர் மக்கள் அனைவரும் காளையின் பிரிவு தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்தனர். மேலும், பெண்கள் கும்மியடித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், கிராம மக்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஊர்வலமாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ஆட்டம் பாட்டத்துடன் காளையை அடக்கம்செய்தனர். கிராமத்தின் பெருமையாக விளங்கிய காளை இறந்தது, மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தங்கள் ஊர் இருக்கும்வரை இந்தக் காளையின் நினைவுகளும் ஓங்கி இருக்குமெனப் பெருமிதம் கொண்டனர் ஊர் மக்கள்.