மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேடு - லஞ்ச ஒழிப்புத்துறையில் சி.பி.எம் புகார்!

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில், குடி தண்ணீர் பைப் பதிக்காமலேயே, பதித்ததாகக் கூறி ஊழலும், முறைகேடும் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச்  செயலாளர் பாலசுப்பிரமணியன், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்செய்துள்ளார்.     

இது தொடர்பாக அவர் பேசும்போது, "மானாமதுரையிலிருந்து  பரமக்குடி வரை  நான்கு வழிச்சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. சாலை போடும்போது, பல இடங்களில் பைப் லைன் அகற்றப்பட்டு திரும்பவும் போட்டிருக்கிறார்கள். குறிப்பாக, முத்தனேந்தல் தொடங்கி புதூர் வரை அகற்றப்பட்ட பைப் லைனை தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிதாக அமைத்துக் கொடுத்தது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை செலவுசெய்து போட்ட சாலை என்பதை மறைத்து, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலவலகத்தில் புதிய பைப் போட்டதாக போலி ஆவணம் உருவாக்கி முறைகேடு செய்துள்ளனர். இதில், 3 லட்சம் ரூபாய்  வரை முறைகேடு நடந்துள்ளது. மேலும், மாட்டுக் கொட்டகை அமைத்ததிலும்  ஊழல் நடந்திருக்கிறது. 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை உள்ள ஊராட்சிகளில், போலி வவுச்சர் போட்டு ஊழல் முறைகேடு நடந்திருக்கிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முடித்தார். 

சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் ஊழல் முறைகேடுகள் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவரை எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!