வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:08:39 (08/01/2018)

அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைக்கிறது – திருச்சியில் அமைச்சர்கள் புகழாரம்

'மருத்துவம், வேளாண்மை, சுற்றுலா மற்றும் கல்வித்துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது' என்று பேசியுள்ளார்கள் தமிழக அமைச்சர்கள்.

திருச்சி தென்னூர், அண்ணாநகர் பொருட்காட்சி மைதானத்தில், அரசுப் பொருட்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்து, 300 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 65 ஆயிரத்து 129 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் எஸ்.வளர்மதி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதலில் பேசிய வெல்லமண்டி நடராஜன், ``கருவிலிருக்கும் குழந்தை முதல் பிறந்து வளர்ந்து கல்வி கற்று மணமுடித்து இல்வாழ்க்கை பெற்று வாழ்ந்து, கல்லறை செல்லும் கடைசிக் காலம் வரை ஒவ்வொரு கட்டத்திலும், காலத்துக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு, குறிப்பாக மகளிர்க்கு அதிக அளவில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்பது நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்று. அனைத்து திட்டங்களும் பிற மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டங்களாகத் திகழ்கின்றன. அதனால்தான், பிற மாநில அரசுகள் நம் மாநிலத்துக்கு வருகைதந்து, இந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்வையிட்டு, இதுபோன்ற திட்டங்களைத் தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ள ஆலோசனை கேட்டுச் செல்கின்றனர்.

இதுபோன்ற திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசு நமக்காக செயல்படுகின்ற அரசு என்பதனை நாம் உணர முடியும்.  மருத்துவம், வேளாண்மை, சுற்றுலா மற்றும் கல்வித்துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தப் புத்தாண்டு மாதத்தில் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் வருகிறது. பொங்கலைக் கொண்டாடி மகிழும் மக்கள், தொடர்ந்து இந்தப் பொருட்காட்சியையும் கண்டுகளித்து இன்புற வேண்டும் என்றார்.

 அமைச்சர் வளர்மதி,

“உலகத்தில் வாழும் தமிழ் இளைஞர்களுக்காக, தமிழ்நாட்டுக்காக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதன் வாயிலாக, இந்தியாவுக்கே முன்னுதார மாநிலமாகத்  தமிழகம் திகழ்கிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பொதுக்கடன் திட்டம், கறவை மாடுகள் வாங்கும் திட்டம், சுயவேலைவாய்ப்பு சிறப்புக் கடன் எனப் பல திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு,

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, “நான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தாலும் என் நினைவெல்லாம் திருச்சி மலைக்கோட்டை மாநகரையே சுற்றிக்கொண்டிருக்கும்” என்பார். அப்படிப்பட்ட ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில்தான் இந்த தமிழ்நாடு அரசின் பொருட்காட்சி நடைபெறுகிறது.

திட்டங்களுக்காக மக்கள் அல்ல. மக்களுக்காகவே திட்டங்கள் என்பது அவரின் தாரக மந்திரம். அரசுப் பொருட்காட்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெரும் வகையில் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது.  திருச்சியில் நடக்கும்  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 190-வது அரசுப் பொருட்காட்சி 45 நாள்கள் நடைபெறும்.

திருச்சிஅரசின் சாதனைகள், நலத்திட்டங்களை எல்லாம் அனைத்து தரப்பு மக்களும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உதவிகள் பெறுதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஒரு இணைப்புப் பாலமாக இந்த அரசுப் பொருட்காட்சி விளங்குகிறது. இது வெறும் காட்சி சாலையாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அரசின் கருத்துகளையும், கொள்கைகளையும், திட்டங்களையும், மக்களுக்கு எடுத்துரைக்கும் கருத்துக் கூடங்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்.

எனவே, இதை திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் பார்த்து பயனடைய வேண்டும். அம்மா அவர்களின் அரசின் திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க