இயற்கை உழவர் அறுவடை பெருநாளைக் கொண்டாடிய முன்மாதிரி விவசாயி!

 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே,  எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ளது உலகம்பட்டி கிராமம். இந்த ஊரில் சிவராமன் என்பவர், விவசாயத்துக்கு செயற்கை ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் பயிர் விளைவிக்கிறார். குறிப்பாக  கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா,  தூயமல்லி, பூங்காறு, இளகி, சேலம் சம்பா போன்ற பழைமையான நெல் ரகங்களை விவசாயம் செய்துவருகிறார்.

மேலும், கோவை, சென்னை, தேனி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் எனப் பல்வேறு மாவட்டங்களில், விவசாயிகள் மற்றும் விவசாயக் கல்வி படித்த இளைஞர்களுக்கு, இயற்கை விவசாயம்குறித்து பயிற்சி கொடுத்துவருகிறார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்து இவரிடம் விதை நெல் வாங்கிச் செல்கின்றனர். இயற்கை விவசாய விஞ்ஞானி  நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இயற்கை உழவர் அறுவடைப் பெருநாள் கொண்டாடப்பட்டது.  நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, 100-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய ஆர்வலர்கள் ஒன்றுகூடி, நெல் விளைந்திருந்த  நெல்லை அறுவடைசெய்தனர். அப்போது, அறுவடைக்கான கிராமியப்பாடலைப் பாடியவாறு, கறுக்கு அரிவாளுடன் விவசாய இளம் விஞ்ஞானிகள் வயல்களில் இறங்கினார்கள்.  கதிர்களை அறுத்தும், இயற்கை விவசாயம்குறித்து குதாகலமாகப் பேசியும் விழாவைக் கொண்டாடினார்கள். அதன்பிறகு, அவர்களுக்கு காலை உணவாக கேப்பை கூழ், கம்மங்கூழ், கஞ்சி பறிமாறப்பட்டன. மதிய உணவாக மாப்பிள்ளைச் சம்பா சாதம், சாம்பார், ரசம், மோர்  வழங்கப்பட்டன. இந்த விழாவை அந்தக் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!