வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (08/01/2018)

கடைசி தொடர்பு:10:49 (08/01/2018)

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையின் சிறப்பு அம்சங்கள்! #LiveUpdates

ஆளுநர் உரையைப் புறகணித்த தி.மு.க-வைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸும் வெளிநடப்புசெய்தது. 

stalin

ஆளுநர் பேசுகையில்.. . ’ஜிஎஸ்டி வரிமுறையை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுகள். மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்திவருகிறது. ஒகி புயல் பாதிப்புகளைப் பார்வையிட வந்த பிரதமருக்கு நன்றி’ என்றார். 

கவர்னர்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எனக் கூறி, தமிழில் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர். இதனிடையே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க அமளியில் ஈடுபட்டது. அப்போது, அமைதி காக்கும்படி ஆளுநர் தமிழில் கூறினார். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்துவிட்டு சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்புசெய்தனர். 

stalin

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும். அவர், இன்று காலை 10 மணிக்கு அவையில் உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். அதன் பிறகு, சட்டப்பேரவைத் தொடரை எவ்வளவு நாள்கள் நடத்துவது என சபாநாயகர் தனபால் தலைமையிலான ஆய்வுக்குழு முடிவுசெய்யும்.

அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஆளுநர் ஆய்வு, ஆர்.கே.நகர் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தாமதம் உள்ளிட்ட விவகாரங்கள்குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னைகளைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள டி.டி.வி.தினகரனும் முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இன்று முதல் பங்கேற்பார். அவருக்கு 148-ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஆளும் அ.தி.மு.க அரசுக்கு 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்று இந்தியத் தேர்தல் ஆணையமே தெளிவாகக் கூறியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நீடிப்பதும் அதை ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டஅமைப்புகள் வேடிக்கைபார்ப்பதும் இந்திய வரலாற்றின் விநோதமான காட்சிகள். எங்கு பார்த்தாலும், லஞ்சம் ஊழலும் முறைகேடுகளும் கொடிகட்டி கோலோச்சுகின்றன. இந்த அநியாய அவலங்களுக்கு மைனாரிட்டி அ.தி.மு.க அரசுதான் முதல் பொறுப்பு. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆளுநர் இரண்டாவது பொறுப்பு. ஆகவே, சகலமும் அலங்கோலமான இந்த நிலையில், ஆளுநர் உரையை தி.மு.க புறக்கணித்து, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது' என்று தெரிவித்தார்.