Published:Updated:

`குழந்தைகள் மகிழ்ச்சியே போதும்!' - நெகிழும் 113 வயது தஞ்சை `மிட்டாய் தாத்தா'

தஞ்சாவூரில் 113 வயதாகும் பெரியவர் ஒருவர் தனக்கென யாரும் இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து உடலில் எந்த நோய் நொடியும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் வாழ்ந்து வருகிறார்.

Abusahir
Abusahir

`தனக்கென யாரும் இல்லை. தன்னம்பிக்கை ஒன்றே மூலதனம். பொய் பேசக் கூடாது; யாரையும் கெடுக்கக் கூடாது; உழைத்துதான் வாழ வேண்டும் என்கிற குறிக்கோள்' இவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் தன்னுடைய 113 வயதிலும் உடலிலும், மனதிலும் எந்தக் குறையும், நோயும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக எல்லோராலும் `மிட்டாய் தாத்தா' எனச் செல்லமாக அழைக்கப்படுகிற தஞ்சாவூரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் உற்சாகத்துடன் கூறுகிறார்.

Abusahir
Abusahir

தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசித்து வரும் முகமது அபுகாசிர் என்பவருக்கு வயது 113. இந்த வயதிலும் இவர் முழு ஆக்டிவ்வாக இருப்பதுடன் தானாகவே தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களை தயார் செய்கிறார். அவற்றை பல கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று விற்பனையும் செய்து வருகிறார். இதில் அவருக்கு சொற்ப வருமானமே கிடைத்தாலும் மனதில் எந்தக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகச் சொல்கிறார். `உழைத்து சாப்பிட வேண்டும். யாரையும் கெடுக்காமல், இருப்பதை வைத்துக்கொண்டு இன்பமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை இறைவன் உடலிலும், மனதிலும் எந்த நோயும், குறையும் இல்லாமல் வாழ வைத்திருப்பதாக' உற்சாகமாகக் கூறும் இவரை அப்பகுதியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் செல்லமாக மிட்டாய் தாத்தா என அழைக்கின்றனர்.

இது குறித்து முகமது அபுசாகிரிடம் பேசினோம், ``நான் பர்மாவைச் சேர்ந்தவன். அங்கு நான் மளிகைக் கடை நடத்தி வந்தேன். வருமானம் நன்றாக இருந்ததால் குடும்பத்தில் எந்தப் பொருளாதாரச் சிக்கலும் இல்லை. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், பர்மாவில் பெரும் சண்டை நடந்தது. அதில், என் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து விட்டனர்.

Sweets
Sweets

என் கண்முன்னாலேயே என் குழந்தைகளும், மனைவியும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து என் இதயம் சுக்குநூறாக உடைந்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்கையில் இப்படி இடி விழும் எனக் கனவிலும் நினைக்கவில்லை. அதன்பிறகு, உயிரற்ற சடலமாக கொஞ்சநாள் அங்கு அலைந்தேன். நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் தவித்தேன். பின்னர் வேறு நாட்டுக்குச் சென்று விடலாம் எனக் கப்பல் ஏறி தமிழ்நாட்டுக்கு வந்தேன். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சில வருடங்கள் வாழ்கை ஓடியது.

அதன் பிறகு தஞ்சாவூருக்கு வந்து விட்டேன் இங்கு யாரையும் தெரியாது. ஆனாலும், அன்பால் என்னை அணைத்துக் கொண்டனர். பின்னர், டீ கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதில், கிடைத்த வருமானத்தை வைத்து தனிமரமான நான், என் வாழ்கையை ஓட்டிக் கொண்டிருந்தேன். வருடங்கள் ஓடியது நான் இருக்கும் ஆடக்கார தெருவைச் சேர்ந்தவர்கள் என் மீது தனி பாசம் காட்டத் தொடங்கி குடும்பத்தில் ஒருவனாக என்னை இணைத்துக் கொண்டனர். இதனால் எனக்கு புது உறவுகள் கிடைத்தது. என்னை விட்டுச்சென்ற மகிழ்ச்சி மீண்டும் என் மீது படரத் தொடங்கியதால், பர்மாவில் நடந்த துயரச் சம்பவம் என் மனதை விட்டு மெல்ல அகலத் தொடங்கியது.

Abusahir
Abusahir

அந்த சமயத்தில் நண்பர் ஒருவர் மிட்டாய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதை, எனக்கும் கற்றுக்கொடுத்தார். `இதுல பெருசா லாபம் கிடைக்காது. குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிப்பதுடன், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீயும் மிட்டாய் செஞ்சு விற்கிறியா?' எனக் கேட்டார். சரின்னு சென்ன நான் அதை செய்யத் தொடங்கினேன். இருபது வருடங்கள் ஆச்சு, இந்த வியாபாரத்தைத் தொடங்கி. `ஏன்டா இதைச் செய்றோம்'னு ஒருநாள் கூட நினைக்காம ஓடிக்கிட்டு இருக்கு.

என்னுடைய 50 வயதில் பர்மாவில் இருந்து வந்தேன் இப்போது 113 வயதாகிறது. இந்த பத்துக்கு பத்திற்கும் குறைவான இடம்தான் என் வீடு; நான் மிட்டாய் செய்கிற இடம். கிட்டத்தட்ட என் வாழ்கையில் பாதி நாளை இந்த அறைக்குள்தான் கழிக்கிறேன். காலை எழுந்ததும் தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களை தயார் செய்யத் தொடங்கி விடுவேன். முன்பெல்லாம் நானே எல்லா வேலைகளையும் செய்து விடுவேன். இப்ப ரொம்ப வயசாகிடிச்சா, அதனால் தேங்காய் மட்டும் பூவாகத் துருவ முடியவில்லை.

Sweets
Sweets

அதனால் அதை மட்டும் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் துருவி தருவார். அவர் எத்தனை தேங்காய் துருவிகிறாரோ அதற்கு ஏற்றார் போல் சம்பளம் கொடுத்து விடுவேன். எல்லாவகை மிட்டாய்களும் தயாரான பிறகு மூங்கில் தட்டில் அழகாக அடுக்கி வைப்பேன். தட்டில் நான்கு பக்கமும் கயிறு கட்டப்பட்டிருக்கும். மதியத்திற்கு மேல் கயிறை பிடித்து தூக்கிக்கொண்டு வியாபாரத்துக்குச் சென்று விடுவேன். இந்த தஞ்சை நகரில் என் கால்கள் படாத இடங்களே இல்லை என சொல்கிற அளவிற்கு மிட்டாய் விற்க நடந்துள்ளேன்.

அடிவயிற்றில் இருந்து, `மிட்டாய்... மிட்டாய்' என நான் கத்துவதை கேட்டதும் குழந்தைகள் அம்மாவிடம் மிட்டாய் வாங்கிக் கொடுமா எனக் கேட்பார்கள். பலர் வாங்கித் தருவார்கள் சிலர் "கண்டதை கேட்கிற" எனக் குழந்தையை அடிப்பார்கள்.

Abusahir
Abusahir

அப்போது, `'உடலுக்கு நல்லது தர கூடிய பொருள்களை சேர்த்துதான் இவை செய்யப்பட்டிருக்கு. இஞ்சி சாப்பிடுவதால் பித்தம், மயக்கம் இருக்காது. தேங்காய் மிட்டாய் சாப்பிட்டால் வயிற்றில் புண் இருந்தால் ஆறி விடும். குளுக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும்' என அவர்களிடம் எடுத்துக் கூறி சாந்தப்படுத்தி காசே வாங்காமல் மிட்டாய்களை கொடுத்து விட்டு செல்வேன். அடுத்த முறை அவர்களே அழைத்து மிட்டாய் வாங்கிக் கொள்வார்கள்'' என்கிறார் குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த 113 வயது `மிட்டாய் தாத்தா'.