ஆளுநர் உரையைப் புறக்கணித்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

பெரும்பான்மை இல்லாத இந்த அரசை பதவியில் நீட்டிப்பதற்கு வாய்ப்பு அளித்து ஆளுநர் உரையாற்ற சம்மதம் தெரிவித்திருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகும் செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்தாண்டின், முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையை தி.மு.க உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `பெரும்பான்மை இல்லாமல் இந்த அரசு, ஆட்சியில் நீடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் விரோதமானது.

இந்த மைனாரிட்டி அரசை பதவியில் நீட்டிப்பதற்கு வாய்ப்பு அளித்து ஆளுநர் உரையாற்ற சம்மதம் தெரிவித்திருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக அமைந்துள்ளது. 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது என்று இந்தியத் தேர்தல் ஆணையமே தெளிவாக கூறியுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி தலைமையில் ஆட்சி நீடிப்பதும் அதை ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் வேடிக்கைப் பார்ப்பதும் இந்திய வரலாற்றின் விநோதமான காட்சிகள். இந்த அரசின் கொள்கைகளை அறிவிக்கும் உரையைப் படிக்க ஆளுநர் ஏற்றுக்கொண்டு இங்கே வந்திருப்பது கண்டு பாராளுமன்ற ஜனநாயகம் வெட்கித் தலைகுனிகிறது. மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநரின் இந்த நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த 13-10-2017 அன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, ஆளுநர்களின் 48-வது மாநாட்டில் உரையாற்றும்போது, 'ஆளுநர்கள் எவ்வித சர்ச்சைகளிலும் ஈடுபடாத அளவுக்கு அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும்' என்று அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலிக்கும் இந்த மண்ணில் பிரதான எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஜனநாயக எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து மாநிலம் முழுவதும் சர்ச்சைக்குரிய வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆளுநரின் நோக்கும் போக்கும் மக்களாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. மைனாரிட்டி அ.தி.மு.க அரசு நீடிப்பதால் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கி, மக்கள் நாள்தோறும் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மாநிலத்தில் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. எங்குப் பார்த்தாலும், லஞ்சமும் ஊழலும் முறைகேடுகளும் கொடிகட்டிக் கோலோச்சுகின்றன. இந்த அநியாய அவலங்களுக்கு மைனாரிட்ட அ.தி.மு.க அரசுதான் முதல் பொறுப்பு. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆளுநர் இரண்டாவது பொறுப்பு. ஆகவே, சகலமும் அலங்கோலமான இந்த நிலையில், ஆளுநர் உரையை தி.மு.க புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!