வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (08/01/2018)

கடைசி தொடர்பு:12:25 (08/01/2018)

பேருந்துகளைச் சேதப்படுத்தினால் குண்டாஸ்! எச்சரிக்கும் அமைச்சர் மணிகண்டன்

அரசுப் பேருந்துகளைச் சேதப்படுத்துபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் ஆய்வு
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராடம் 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரத்தில் பேருந்துகள் இயக்கம்குறித்து தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்  நேரில்ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தனி நபர்களில் அனுபவம் மிக்கவர்களைக்கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. அவ்வாறு பேருந்துகளை இயக்கும் நபர்களுக்கு, தக்க பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உண்மையில் மக்களுக்கு சிறப்பான சேவையாற்றும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கவும் பரிசீலிக்கப்பட்டுவருகிறது. பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில், அண்ணா போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களில் 10 சதவிகிதம் பேரே பணிக்கு வராமல் உள்ளனர். அவர்களையும் பணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். அரசுப் பேருந்துகளைச் சேதப்படுத்துபவர்களை இனம்கண்டு, அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள். பேருந்துகளைச் சேதப்படுத்துவோரை இரும்புக்கரம்கொண்டு அடக்குவோம்'' என்றார்.