குமரி மீனவர்களை அரசுகள் கண்டுகொள்ளாததற்கு இதுதான் காரணமா? ஓர் அதிர்ச்சித் தகவல்

ஒகி புயல் பேரழிவுகுறித்து உண்மை அறியும் குழுவின் அறிக்கை, இன்று மதுரையில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், 'பேரழிவு பெரிய அளவில் நடந்துள்ளது தெரிந்தும், மத்திய-மாநில அரசுகள் அலட்சியமாக நடந்துள்ளன' என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர்கள் லயனல் அந்தோனிராஜ், பாலசுப்பிரமணியம், அரி ராகவன், இமயவரம்பன், தாஜுதீன், ஆசிரியர் விஜிலால், ராஜேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆய்வுபற்றி அவர்கள் கூறும்போது, "கடந்த டிசம்பர் 26, 27, 28  தேதிகளில் குமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை ஆகிய மீனவ கிராமங்களில் உள்ள மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினோம். அதில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை.

மீனவர் பேரழிவு

இதில், மிகப்பெரிய பேரழிவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அணுஉலை திட்டங்கள், துறைமுகங்கள், கடலோர சுற்றுலா விடுதிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பயன்பெறும் திட்டங்களுக்கு எதிராக மீனவர்கள்  இருப்பதால்தான், மத்திய அரசு அவர்களுக்கு ஏற்பட்ட பேரழிவைக் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறது. இந்தப் பேரழிவுக்கு, பேரிடர் மேலாண்மயின் தேசியத் தலைவராக இருக்கும் பிரதமர், மாநில முதல்வர், குமரி மாவட்ட கலெக்டர் ஆகியோர்மீது தனி விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை நடத்தப்பட வேண்டும். காணாமல் போனவர்களை இறந்ததாக கணக்கில்கொள்ள 7 வருடம் என்பதை நீக்க வேண்டும். மீனவர்களைக் கொண்டே மீட்புப்படை அமைக்க வேண்டும். அவர்களுக்கு சாட்டிலைட் போன் கொடுக்க வேண்டும்" என்று பல முக்கிய தீர்வுகளையும் உண்மை அறியும் குழுவினர் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!