ரூ.10 லட்சம் செலுத்தி அப்போலோ செல்லமுடிந்தால், மக்கள் ஏன் அரசுப் பேருந்தில் வரப்போகிறார்கள்? - அரசுக்கு நீதிபதி சாட்டையடி | Highcourt questions TN government in Transport strike issue 

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (08/01/2018)

கடைசி தொடர்பு:13:26 (08/01/2018)

ரூ.10 லட்சம் செலுத்தி அப்போலோ செல்லமுடிந்தால், மக்கள் ஏன் அரசுப் பேருந்தில் வரப்போகிறார்கள்? - அரசுக்கு நீதிபதி சாட்டையடி

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

madras hc
 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஐந்து நாள்களாகப் போராட்டம் தொடர்வதால், தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிரான வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக, தொழிற்சங்கங்கள் பதில் மனுத்தாக்கல் செய்தன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை நீதிமன்றம் கண்டித்தது. `இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது யார் என்பதை உணர்ந்துள்ளார்களா. இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 600 ரூபாய் சம்பள உயர்வுக்காகப் பொதுமக்களைப் பாதிப்படையச் செய்வது சரியா? பணக்காரர்கள் காரில் செல்கிறார்கள். இந்தப் போராட்டத்தால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை’ என்று தொழிலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு தரப்பையும் நீதிபதி சரமாரியாகக் கேள்வி கேட்டுக் கண்டித்தார். `போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை முழுமையாக வழங்காதது ஏன். தொழிலாளர்களின் நிதியைப் பிடித்துவைத்து திருப்பிக் கொடுப்பதில் ஏன் தாமதம்? நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை இயக்க முடியவில்லை என்றால், கலைத்துவிட்டு தனியார் மயமாக்க வேண்டியதுதானே. 10 லட்சம் செலுத்தி அப்போலோ செல்ல முடிந்தால், ஏன் அரசுப் பேருந்தை மக்கள் நம்பியிருக்கிறார்கள்’ என்று நீதிமன்றம் அரசைக் கண்டித்தது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க