வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (08/01/2018)

கடைசி தொடர்பு:13:13 (08/01/2018)

பஸ் ஓட்டுநர்களா, பழகுநர்களா? - தொடரும் ஸ்டிரைக்கால் அச்சத்தில் சென்னை பயணிகள்

பஸ் ஸ்டிரைக்

பஸ் ஸ்டிரைக்கால் முக்கால்வாசிக்கும் மேலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாதநிலையில், ஐந்தாவது நாளாக மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக அவதியுற்றுவருகின்றனர்.

பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட பணத்தைச் செலவழித்துவிட்டு, ஊழியர்களை ஏமாற்றுவதை நிறுத்தி, அந்தத் தொகையை உரியமுறையில் திரும்பத் தர வேண்டும், நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊழியர்களின் சம்பளப் பிடித்தத் தொகையைத் திரும்பத் தர வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள பணியிறுதிக்கால பணப்பயன்கள், ஓய்வூதியம் போன்றவை உட்பட்ட அனைத்து தொகைகளையும் ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதையொட்டி, மிகவும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டுவருகின்றன. 

இயக்கப்படும் பேருந்துகளில், அனுபவமில்லாத ஓட்டுநர்களைத் தற்காலிகமாகப் பணியாற்றச் செய்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் இது தெளிவாகத் தெரிகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காக்கிச்சட்டை சீருடையையும், அத்துடன் பொதுப்போக்குவரத்து வாகன ஓட்டுநருக்கான ‘பேட்ஜை'யும் அணிந்திருக்க வேண்டும். ஆனால், பாதிக்குப் பாதி பேர் சீருடை அணியாமலேயே பேருந்தை ஓட்டுகின்றனர். மூன்று நாள்களாக இது தொடர்கிறது. இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, பதில்கூற மறுத்துவிட்டனர்.

பொதுப்போக்குவரத்து பேட்ஜ் இல்லாதவர்களே, இப்படி சீருடையும் இல்லாமல் பேருந்துகளை ஓட்டுகின்றனர்; உரிய அனுபவம் இல்லாதவர்களை வீம்புக்காக பேருந்தை ஓட்டவைப்பதால், விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. அநியாயமாக, கடலூரில் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. சென்னை ஆவடியில் இப்படியான திடீர் ஓட்டுநர், கட்டடத்தின்மீது பேருந்தை ஏற்றி மோதியுள்ளார். நல்வேளை, அதில் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இந்நிலையில், நகரில் திடீர் ஓட்டுநர்கள் இயக்கும் பேருந்துகளில் பயணம்செய்ய பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

வழக்கமான நாள்களைவிட பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், பயணிகள் கூட்டம் இல்லை. காரணம், பேருந்து எங்காவது விபத்தாகிவிடுமோ எனப் பயணிகள் அச்சமடைவதுதான் என்பதை பல இடங்களிலும் கேட்கமுடிந்தது. அப்பட்டமான விதிமீறலை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு பக்கம் இருக்க, பயணிகளின் பாதுகாப்புகுறித்து அரசாங்கம் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறது என்பதையும் இது காட்டுகிறது.