வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/01/2018)

கடைசி தொடர்பு:14:00 (08/01/2018)

`ஹைடெக் டி.வி-யைத் திருடினோம் சார்' - கொள்ளையர்களிடமே களவாடிய இன்ஸ்பெக்டர்

டி.வி திருட்டு விசாரணையில், இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு, கடந்த டிசம்பர் மாதம் க்ரைம் டீமிலிருந்து ஒரு தகவல் வந்தது. அஞ்செட்டியைச் சேர்ந்த சேட்டு, உரிகத்தைச் சேர்ந்த பிரபு ஆகிய இரண்டு பேரும் தவறான வழியில் ஈடுபடுவதாகக் கூறி விசாரித்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனிடம், 'சார் எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறோம்' என்று கத்திக் கதறியுள்ளனர்.

டிவி திருட்டு போலீஸ் ஸ்சேடன்

சார், ''நாங்க ரெண்டு பேரும் பெங்களூரு போய் எலெக்ட்ரானிக் பொருள்களை எல்லாம் திருடி, பாதி ரேட்டுக்கு வித்துருவோம். இதுல கிடைக்கிற பணத்தை   ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்துவோம். வேற எந்தத் தப்பும் செய்யல'' என்று கத்திக் கதறியுள்ளனர். 'இப்போ என்ன திருடுனீங்க' என்று விசாரித்தபோது, '5 லட்ச ரூபாய் மதிப்புள்ள எல்ஜி, சோனி எல்இடி டி.வி நாலு திருடினோம். வீட்டுல இருக்கு' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சேட்டு வீட்டில் பதுக்கிவைத்திருந்த புத்தம் புதிய நான்கு டி.விகளைக் கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் லட்சுமணன், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்து பார்த்தபோது, எல்லாம் ஐடெக் மாடல் டி.விகள். டி.வி திருடப்பட்டதற்கு புகார் எதுவும் இல்லாததால்,  சந்தேக கேஸ் மட்டும் போட்டு, நீதிமன்றத்தில் அபராதம் கட்டச்சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார். 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 4 டிவி-களை ஸ்டேஷனில் யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு எடுத்துச்சென்றுவிட்டார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஷ்குமார், ஏடிஎஸ்பி வீரராகவன் தலைமையில் விசாரணை அமைத்துவிட்டார். 

தேன்கனிக்கோட்டை  போலீஸார், டி.விகுறித்த உண்மைத் தகவலை இன்ஸ்பெக்டருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிட்டனர். விசாரணையை எதிர்கொள்ள சைலன்ட்டாக நான்கு டி.விகளை தளி பழைய போலீஸ் ஸ்டேஷன் குடோனில் கொண்டுபோய் வைத்துவிட்டார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். விசாரணையில் வசமாகச் சிக்கியுள்ளதால், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கலக்கத்தில் உள்ளார்.