`விரும்பிதான் காதலனுடன் சென்றேன்' - காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய நீதிபதி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர். நல்லம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரின் ஒரே மகன் ராஜ்குமார், கைப்பந்து விளையாட்டு வீரர். ராஜ்குமாரும் நல்லம்பள்ளி வன்னியர் தெருவைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் பிரியங்காவும் காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பிரியங்கா வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், பிரச்னை அதியமான்கோட்டை காவல் நிலையம் வரை சென்றுள்ளது.  

தர்மபுரி காதலர்கள் ராஜ்குமார் பிரியங்கா

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30-ம் தேதி சனிக்கிழமை, வீட்டை விட்டுச் சென்ற பிரியங்கா வீடு திரும்பவில்லை. தன் மகளை கடத்திவிட்டதாக முனிராஜ் புகார் கொடுத்தார். காதல் பிரச்னையால் சாதி ரீதியான தாக்குதல் நடக்கலாம் என்று நல்லம்பள்ளி கோயில் தெருவைச் சேர்ந்த மக்கள், அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

அதேபோல, டிசம்பர் 31-ம் தேதி இரவு 7 மணிக்கு, நல்லம்பள்ளி கிராமத்தில் நுழைந்த பிரியங்காவின் அண்ணன், இரண்டு வீடுகள்மீது தாக்குதல் நடத்தினார். பதிலுக்கு தாக்குதல் நடத்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் பெட்ரோல் குண்டுகள் தயாரித்தபோது, போலீஸார் அதைக் கண்காணித்துப் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டுகளைக் கைப்பற்றி அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர். இரண்டு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை தர்மபுரி ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் காதலர்கள் ராஜ்குமார், பிரியங்கா இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விரும்பிதான் காதலன் ராஜ்குமாருடன் சென்றதாக பிரியங்கா ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பிரியங்காவை காதல் கணவன் ராஜ்குமாருடன் செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!