வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (08/01/2018)

கடைசி தொடர்பு:14:40 (08/01/2018)

`கண்டக்டராகப் பணி புரிய மாட்டோம் - அதிகாரியை அதிர்ச்சியடையவைத்த டிக்கெட் பரிசோதகர்கள்

அரசுப் பேருந்துகளுக்குத் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றச் சொன்னதால், அரசு டிக்கெட் பரிசோதகர்களும் போராட்டம்செய்து வருகின்றனர்.

கடந்த 4 நாள்களாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது தமிழகம். போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பொதுமக்களின் அன்றான வாழ்க்கை பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், போதுமான பயிற்சிகள் இல்லாத தற்காலிக ஓட்டுநர்களைவைத்து பேருந்துகளை இயக்குவதால், தமிழகத்தில் ஏற்படும் விபத்துகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், நேற்று இரண்டு தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்பட்ட பேருந்துகள் மோதிக்கொண்டதில், பைக்கில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி நேற்று மட்டும் கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் மனதைப் பதறவைக்கின்றன.

போராட்டம்

மினி டெம்போக்களை இயக்கிவந்த ஓட்டுநர்களைவைத்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போதே இவ்வளவு விபத்துகள் ஏற்படுகின்றது. இந்நிலையில், இன்று டிக்கெட் பரிசோதகர்களை நடத்துநர்களாகப் பணியாற்றுமாறும் அரசு உத்தரவிட்டதால், அவர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். கடலூர் அரசுப் பணிமனையின் முன் 45 டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய அவர்கள், “கடலூர் மாவட்டத்தில் நாங்கள் 47 பேர் பணிபுரிகிறோம். இன்று எங்களை அழைத்த அதிகாரிகள், நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு நாங்கள் பணி புரிய மாட்டோம் என்று சொல்லி வந்துவிட்டோம். தற்காலிக ஓட்டுநர்கள் மட்டும்தான் இருக்கிறார்களே தவிர, தற்காலிக நடத்துநர்கள் இல்லை. அதனால் ஓட்டுநர்கள் மஞ்சள் பையை வைத்துக்கொண்டு காசு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்பது ஒன்றுதான் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க