காதலன் சொன்ன `அந்த வார்த்தைகள்' - உயிரை மாய்த்துக்கொண்ட காதலி

"என்னையே ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டியா... உன் கண்ணு முன்னாடியே உங்க அப்பாவை ரோட்டுல வெச்சு வெட்டுறேன் பாக்குறியா" என்று மிரட்டிய காதலனால் மனமுடைந்து  தற்கொலைசெய்துகொண்டார் காதலி. இந்தச் சோக சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                            

அரியலூர் மாவட்டம், சாலையக்குறிச்சி கிராமத்தில் உள்ள காலனித்தெருவைச் சேர்ந்தவர், முத்துச்செல்வத்தின் மகள் ஆனந்தி. பக்கத்து கிராமமான கொடுக்கூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன், பாஸ்கர். ஆனந்தியும் பாஸ்கரும் காதலித்துவந்துள்ளனர். "திருமணம் செய்துகொள்கிறேன்" என ஆசைவார்த்தை கூறி, ஆனந்தியைத் தனியாகப் பலமுறை அழைத்து சந்தித்துப் பழகியிருக்கிறார். நாள்கள் செல்லச்செல்ல ஆனந்தியிடம் பழகுவதைக் குறைத்துக்கொண்டே சென்றிருக்கிறார் பாஸ்கர்.

இந்நிலையில், கடந்த 9.11.2017 அன்று, ஆனந்தி தன்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் பாஸ்கர்மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கர் ஆனந்தியைப் பார்த்து, என்னை சிறைக்கு அனுப்பிய உன்னைக் கொன்றுவிடுவேன். அதுமட்டுமல்லாமல் உன் கண்ணு முன்னாடியே உங்க அப்பனை வெட்டுவேன். இதோடு மட்டுமல்லாமல், உங்க குடும்பத்தை அழிக்கிறேன் பாக்குறியா" என மிரட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்து விஷம் அருந்திய ஆனந்தியை ஆபத்தான நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆனந்தி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆனந்தியின் தாயார் சின்னப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் போலீஸார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!