வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (08/01/2018)

கடைசி தொடர்பு:12:45 (09/01/2018)

முதல் சட்டப்பேரவைக் கூட்டம்! - ஆளுநர் உரையைக் கடுமையாக விமர்சித்த தினகரன்!

கூடங்குளத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட அணுஉலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, புதிதாக அணுஉலைகள் அமைக்க முயல்வது ஏன் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள டி.டி.வி.தினகரன், இன்று கூட்டத்தொடரில் பங்கேற்றார். ஆளுநர் உரை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 'சட்டப்பேரவையில் நான் இப்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளேன். எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதால், தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும்போது நானும் வெளிநடப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

 

 

ஆளுநர் உரை திருப்தியாக இல்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்ட அணுஉலைகள் பாதுக்காப்பற்ற நிலையில் இருக்கும்போது, புதிதாக அணுஉலை அமைக்க முயல்வது ஏன்? தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கின்றனர். கடலூரில் காணாமல்போன 22 மீனவர்களைத் தேடும் பணிகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஒகி புயலில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியைத் தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்துவதுகுறித்த அறிவிப்பு இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்த அறிவிப்பு இல்லை. புதிதாக மின் உற்பத்திகுறித்து எந்தத் திட்டமும் இல்லை. பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் இதுவரை எழுத்தளவிலேயே உள்ளது' என்று குற்றம் சாட்டினார்.