வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (08/01/2018)

கடைசி தொடர்பு:14:03 (08/01/2018)

சாப்பாடுகள் சூழ் ‘வேலைக்காரன்’ குப்பம்... இது மதுரையின் திடீர் நகர்! #SpotVisit

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பாதி வழியிலேயே பேருந்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒருவழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டை வந்தடைய நள்ளிரவு ஒரு மணியாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளிய நிலையில், நடுராத்திரி எங்கே போய் சாப்பாட்டுக்கு அலையுறது என்ற மலைப்புடன் பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க, காற்றில் மணக்கிறது அறுசுவையின் மணம்.

மூக்கைத் தீட்டிக்கொண்டு வாசனை வந்த பஸ் ஸ்டாண்டின் பக்கத்து சந்தில் நுழைய, நம்மை வரவேற்று இட்லி, வடை, பொங்கல் என ஆவி பறக்க பரிமாறி அசத்தினர் இரவுக்கடை உரிமையாளர்கள். பசி தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகுதான் நினைவு வந்தது, 'அட நம்ம வந்துருக்கிற ஊரு தூங்கா நகரமான மதுரை. ஆமாப்பா, அல்லங்காடின்ற பேருல இரவுச் சந்தைகள் இயங்கிய வரலாறுகூட இந்த ஊருக்கு இருக்குல்ல' என எப்போதோ படித்தவற்றை அசைபோட்டுக்கொண்டே நான் நின்ற பிசியான அந்த ஹாட் ஸ்பாட், திடீர் நகர்.

ஆறு தெருக்களில் ஐந்நூறு குடும்பங்களாக வசிக்கும் இந்தப் பகுதியில் எண்ணிலடங்கா இட்லிக்கடைகள், சாப்பாட்டுக் கடைகளைக் காண முடிந்தது. "இட்லி, தோசை, பஜ்ஜி, போண்டா, கலவை சாதம், டிபன் ஐட்டம்ஸ் தொடங்கி நான்வெஜ்வரை, மணக்கும் இவர்களது கைப்பக்குவத்துக்கு உள்ளுர் மட்டுமல்லாது வெளியூர்வாசிகளும் அடிமை" என்கிறார்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள்.

சிம்மக்கல்லின் பழ மார்க்கெட், மாட்டுத்தாவணியின் காய்கறிச் சந்தை, பூச்சந்தைகளுக்கு அன்றாடம் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள், ஜங்ஷனில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பயணிகள் என மதுரையை நம்பி வரும் லட்சக்கணக்கான முகங்களின் பசி தீர்க்கும் கூடம்தான் இந்தக் குப்பம்.  இரவு இரண்டு மணியளவில்கூட திடீர் நகரின் தெருக்களில் மக்கள் பசியாற்றுவதைக் காண முடிகிறது.

உங்க ஏரியாவைப் பத்தி சொல்லுங்களேன் என அங்கிருந்த சிலரிடம் பேச்சுக்கொடுக்க, அவர்கள் தொடர்கிறார்கள். "ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக எங்க ஏரியா ஜனங்களோட பிரதான தொழிலே இதுதான். டிரைவர், கண்டக்டர், ஆட்டோ ஓட்டுறவங்க, மதுரைக்கு பொருள் வாங்க வர்றவங்க. சுற்றுலா வர்றவங்கன்னு எல்லார் வயிறும் எப்பவும் பசியா இருக்கும். அவங்களுக்கான சாப்பாடு எங்ககிட்ட இருக்கும்" என பிசினஸ் லாஜிக்கில் அசத்துகிறார்கள்.

"எங்க ஏரியா ஜனங்களுக்கு தூக்கம்கிறது நாலு மணி நேரம்தான். காலை ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பு பத்த வைச்சோம்னா, அடுப்பு அணைய நள்ளிரவு இரண்டு மணி ஆகும். ஏரியாக்குள்ளயே சமைச்சு காலை சாப்பாட்ட பார்சல்  போட்டு ரிக்‌ஷா வண்டியில கட்டிக்கிட்டு பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடுவோம். காலை 10 மணிக்குள்ள சாப்பாடு முழுக்க வித்துடும். கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு மறுபடியும் இரவு சாப்பாட்டுக்கான வேலையை ஆரம்பிச்சுடுவோம்.. லேட் நைட் சவாரி முடிச்சுட்டுவர்ற டிரைவருங்க, வெளியூர்ல இருந்து மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க வர்றவங்க, தொழிலுக்காக மதுரைக்கு வரும் கிராமத்து ஜனங்கன்னு, இரவு பதினொரு மணிக்கு மேலதான் வியாபாரம் சூடுபிடிக்கும். விழாக் காலங்களில் வியாபாரம் இரண்டு மடங்கா இருக்கும். எங்க சாப்பாட்டோட விலையில வித்தியாசமே கிடையாது. மாறுவது ருசி மட்டும்தான்".

சரக்கு மற்றும் சேவைவரி என்று லாபம் பார்க்கத் துடிக்கும் பல தொழில்களுக்கு மத்தியில் உழைப்பின் கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் இந்த மக்களின் வாழ்க்கை ஓடுவது அன்பாலும், மனிதத்தாலும் மட்டுமே.

 


டிரெண்டிங் @ விகடன்