வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (08/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (08/01/2018)

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் திடீர் தடை!

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, தொழிற்சங்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடை விதித்தனர். இதனால், பல்வேறு பகுதிகளில் பதட்டம் நிலவியது.

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு திடீர் தடை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை வலுவிழக்கச்செய்ய அரசு மேற்கொண்ட முயற்சிகள் போதுமான பலனைத் தரவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அந்தப் பேருந்துகள் பல இடங்களில் விபத்துகளைச் சந்தித்துவருகின்றன. இதனால், அரசுப் பேருந்து வசதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், மாணவர்கள் இன்றும் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின்  வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்தும் போராட்டத்தைக் கைவிட மறுத்தும் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்திருந்தனர். இதற்கான அனுமதியை அந்தந்தப் பகுதி போலீஸாரிடம் தொழிற்சங்கத்தினர் பெற்று, இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.


 ஆனால், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களிடம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறிய போலீஸார், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை விதித்தனர். சென்னை உயர் நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்துக்குத் தடை விதித்துள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் தடை விதித்ததால், ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த பல்வேறு இடங்களில் பதட்டம் நிலவியது.