``விவசாயிகள் என்றால் கிள்ளுக்கீரையா?’’ கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி, " விவசாயிகள் என்றாலே இந்த அரசிற்கு  கிள்ளுக் கீரையாகத்தான் தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2016-17 ம் ஆண்டில் வரலாறு காணாத அளவில் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட 100 சதவிகித வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால், உரிய விளைச்சல் இல்லை. இதனால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நெல் தவிர கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகிய எந்த ஒரு மானாவாரிப் பயிர்களுக்கும் பயிர்க்காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகாக்களில் மலையடிவாரப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் பன்றிகள், மான்கள் ஆகியவை புகுந்து அதிகமான சேதத்தை விளைவித்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் வளர்ந்தும், உபயோகமாகாத நிலையில் உள்ளன. வனவிலங்குகள் மலையடிவாரப் பகுதிகளுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வராத வகையில், வனப்பகுதியில் விலங்குகளுக்காகக் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படுவதோடு, அவற்றில் எப்போதும் தண்ணீர் இருக்கும்படியாக வனத்துறையினர் கண்காணித்து வர வேண்டும். மலையடிவாரப் பகுதிகளில் உயரமான தடுப்புகள் அமைக்கப்படுவதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தவிர்க்க முடியும்.  

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள், மானியங்கள் ஆகியவை குறித்து அனைத்துக் கிராமங்களிலும் பட்டியலிட்டு தெரியப்படுத்த வேண்டும். அத்துடன், ஒவ்வொரு மாதமும் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து முன்னறிவிப்பை செய்தித்தாள்கள் வழியாக முறையாகத் தெரியப்படுத்த வேண்டும்." என்றார்.  ஆட்சியர் நேரடியாக வந்து விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் சார்பில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயிகளின் மனுவைப் பெற்றுக் கொண்டார். விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!