`அவங்களோட சாவுக்கு நானும் காரணமாயிட்டேன்!' - ஒரு மெக்கானிக்கின் வேதனை வாக்குமூலம்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், இரவு நேரங்களில் உயிரைப் பணயம்வைத்து இளைஞர்கள் செல்லும் பைக் ரைடர்ஸ் பழக்கம் இப்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவிவிட்டது. இதனால், சாலை விபத்துகளில் இளைஞர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த சனிக்கிழமை அன்று, புதுக்கோட்டை சிவபுரம் பகுதியில் அப்படி பைக் ரைடு சென்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேகமாக வந்த இளைஞர்கள், தனியார் பேருந்தின் இடதுபுறத்தில் மோதியிருக்கிறார்கள். சாதாரண பைக்குகளில் இவர்கள் பைக்ரைடு செல்வதால், மிக ஆபத்தான சூழலில் கண்ட்ரோலை இழந்து விபத்துகளில் மாட்டிக்கொள்கிறார்கள். இதில், மற்றொரு பரிதாபமான விஷயம், இரண்டு பேரும் ஹெல்மெட் போடவில்லை என்பதுதான்.

accident

இதுகுறித்து பைக் மெக்கானிக்கிடம் விசாரித்தபோதுதான், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பைக் ரைடிங் கலாசாரம் அதிகமாகியிருக்கும் விஷயமே தெரியவந்தது.

"என்னோட மெக்கானிக் கடைக்குப் புத்தம் புது பைக்கோட பசங்க வரும்போது, எனக்கு பதற்றமா இருக்கும். ஏன்னா, அவங்க என்ன கேட்பாங்கனு எனக்குத் தெரியும். அலறும் ஹாரன், பவர் பிரேக், ஹேண்டில் பார் இவற்றில் சில மாறுதலைப் பண்ணச்சொல்லிக் கேட்பாங்க. கேட்கிற பணத்தைத் தர்றோம்னு  சொல்லுவாங்க. நான் எடுத்த எடுப்பிலேயே மறுத்துடுவேன். காரணம், பணத்துக்கு ஆசைப்பட்டு அந்தக் காரியத்தை சில வருடங்களுக்கு முன்னாடி செஞ்சுகொடுத்துட்டிருந்தேன். சில மாதங்களிலேயே அந்தப் பசங்க ஆக்ஸிடென்ட்டுல இறந்துட்டதா பேப்பர்ல படத்தோட நியூஸ் பார்த்தேன். அவங்க கிடந்த கோலத்தைப் பார்த்து, அன்னிக்கு பூரா சோறு தண்ணீர் இறங்கலே. அவங்களோட  சாவுக்கு ஒரு வகையில் நாமளும் காரணமாயிட்டோமேனு மனசு முழுக்க பாரம். இனிமே, இப்படிப்பட்ட பசங்க என்ன சொல்லிக் கேட்டாலும், எவ்வளவு பணம் தர்றேன்னு சொன்னாலும் இந்தக் காரியத்தைப் பண்ணக் கூடாதுனு முடிவுபண்ணி அன்னிக்கு விட்டேங்க" என்றார் அந்த மெக்கானிக்.


அவரே தொடர்ந்து, "புதுக்கோட்டை மாவட்டத்தில் பைக் ரைடர் போற பழக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், ஆறு மாதங்களாக இது அதிகமாயிடுச்சு. அதுக்குக் காரணம், பைபாஸ் ரோடுதான். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் பைபாஸ் ரோட்டில் பைக் ரைடு போகிறார்கள். ரோடு விசாலமா இருக்கிறது ஒரு காரணம். சென்னை, மும்பை மாதிரி ஊர்களில் இதுபோல பைக்ரைடு போகிறவர்கள்  அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பைக்குகளில் போவார்கள். ஒவ்வொரு பைக்கும் 2 லட்ச ரூபாயில் ஆரம்பித்து, 10 லட்ச ரூபாய் வரை இருக்கும். அது, ஸ்டாட்டிங் மைலேஜ் வேகமே, 60 கிலோ மீட்டர். அப்படியான பைக்குகளில் உச்ச வேகத்தில் போனாலும் ஆபத்தான சூழலில், பிரேக்கிங் சிஸ்டம் பக்காவா இருக்கும். அந்த மாதிரி விசயங்களை  60 ஆயிரம், 80 ஆயிரம் பைக்குகளில் எதிர்பார்த்தா கிடைக்காது. என்னதான் மெக்கானிக் மூலமா பிரேக்கிங்  சிஸ்டத்துல மாறுதல் பண்ணினாலும், 80, 90 கிலோ மீட்டர் வேகத்தில் போகும்போது, வண்டி 'ஒலப்பி'விட்டுடும். டயர் ரோட்டுல தேய்ச்சு தீய்ஞ்சு போறதால, வண்டியை எந்தக் கொம்பனாலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. சமயத்துல, பிரேக் கேபிளும் கட்டாயிடும். அப்புறம் என்ன... போய்ச் சேர வேண்டியதுதான்" என்று முடித்தார் அந்த மெக்கானிக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!