வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (08/01/2018)

`பார்த்தபோது எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது' - நள்ளிரவில் படம் எடுத்த வாலிபரை மிரளவைத்த ரேபீஸ் நாய்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இரவு நேரங்களில் தெருவில் நடமாடும் நாய்கள் ஹோட்டலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லத் தண்ணீரை நக்கிக் குடிப்பதால்,அந்தப் பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தெரு நாய்கள் என்றாலே பாம்புக்கு நிகராகப் பயப்படுபவர்கள் இன்றைக்கும் நம்மில் நிறைய பேர் உண்டு. அதிலும் நாய்கள் அதிகம் வசிக்கும் சிறிய தெருக்கள் வழியாக நள்ளிரவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதைக் கடப்பதற்கென்றே ஆட்டோ பிடிப்பவர்களும் உண்டு. காரணம்,ரேப்பீஸ். இந்தக் கொடுமையான வியாதியைப் பரப்பக் காரணமாக இருக்கும் தெருநாய்கள், அதிலும் சொறிநாய்கள் மனிதர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை நக்கிக் குடிப்பதைப் பார்க்க நேரிட்டால், நமக்கு எப்படி இருக்கும். இப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தினமும் நடக்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறதா. அங்கு ஹோட்டல் வைத்திருப்பவர்கள் தினமும் இரவு நேரங்களில்தான் மறுநாளுக்குத் தேவையான தண்ணீரைப் பிடித்து வைப்பது வழக்கம். அந்தத் தண்ணீரைக் கொண்டுதான் சமைக்கவும் செய்வார்கள். சாப்பிட வருகிறவர்களுக்கு குடிக்கவும் கொடுப்பார்கள்.

ட்ரை சைக்கிளில் நெருக்கியடித்து பிளாஸ்டிக் குடங்களை வைத்தும் அதுபோதாதென்று, இடது, வலது ஓரங்களில் கட்டித் தொங்கவிட்டும் அதில் அருகில் உள்ள நல்ல தண்ணீர் கிணற்றிலிருந்து நீரை இறைத்துக்கொண்டுவருவார்கள். மறுநாள் சமைப்பதற்கு இட்லி, தோசை மாவுகள் மற்றும் காரச்சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றில் கரைப்பதற்கு மேலும், புரோட்டா, பூரி மாவுகள் பிசைவதற்கு அந்தத்தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, டீக்கு பயன்படுத்தப்படும் பாலில் 'எடை' கட்டுவதற்கும் இந்த நன்நீர்தான் ஏற்றப்படுகிறது. அத்துடன் ஹோட்டலுக்கு வருகிற வாடிக்கையாளர்கள் குடிப்பதற்கும் இதுதான் ஊற்றப்படுகிறது. இப்படி ஹோட்டலின் சகலத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் நீரை தெருநாய்கள் நக்கிக்குடிப்பது அந்தப்பகுதி மக்களை பெரும்பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.

அந்தப் படத்தை எடுத்தவரைத் தொடர்புகொண்டு பேசினோம். "வேலை முடிச்சுட்டு இரவு 12 மணிக்கு அமரகாண்டான் வடக்குக்கரை ரோடு வழியா டூ வீலர்ல வந்துகிட்டிருந்தேன். அப்பதான் இந்தக் காட்சியைப் பார்த்தேன். பக்கத்துல போனால் நாய் ஓடிடும்னு தூரத்திலிருந்து என்னோட மொபைல் போன்ல போட்டோ எடுத்துட்டேன். அப்புறமா பக்கத்துல போய் பார்க்கறேன். குடத்துல மேல தன்னோட ரெண்டுக்காலையும் போட்டு, நாக்கை உள்ளே விட்டு, 'சலப்..சலப்'னு தண்ணீரை நக்கிக் குடிச்சுட்டு இருக்கு. எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. காரணம், நாயோட நாக்கிலிருந்து வழியும் உமிழ்நீர்தான் 'ரேப்பீஸ்' வர முக்கியக் காரணமே. அந்தக் குடத்துத் தண்ணீரை ஹோட்டலில் சாப்பிட வர்றவங்களுக்குக் குடிக்க வைப்பாங்க. இந்த விஷயம் ஹோட்டல்காரங்களுக்கும் சாப்பிட வர்றவங்களுக்கும் தெரியாது. அந்தத் தண்ணீரைக் குடிச்சா 'ரேப்பீஸ்' வருமானு. ஆனா, ஒண்னுமட்டும் நிச்சயமாகத் தெரியும். பாம்புக்கு பல்லுல விஷம். நாய்க்கு எச்சியில விஷம். பாம்புக் கொத்தினா, உடனே சாவு. நாய் கடிச்சா, மெல்ல சாவு. அப்படிப்பட்ட நாய்கள் தண்ணீரை நக்கிக் குடிக்கறதைப் பார்த்ததுமே நடுக்கம் வந்துடுச்சு" என்றவர், தொடர்ந்து, `பக்கத்துலதான் அமரகாண்டான் குளம் இருக்கு. அதுல போய் தண்ணீர் குடிக்காம, இந்தத் தண்ணீரைக் குடிக்குதுன்னா என்ன அர்த்தம். குளத்துத் தண்ணீர் அவ்வளவு கெட்டுப்போயிருக்குனு நாய்கள் மோப்பசக்தியால புரிஞ்சு வெச்சிருக்குங்க. அதான் மனுசங்க குடிக்கிறத் தண்ணீரை அதுங்களும் குடிக்குதுங்க" என்றார்.