வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (08/01/2018)

கடைசி தொடர்பு:16:02 (08/01/2018)

'தலைமை நீதிபதியிடம் மனக்குமுறலைக் கொட்டிய போக்குவரத்து ஊழியர்கள்!' - அரசுக்குச் சாட்டையடிகொடுத்த நீதிமன்றம்

பஸ் ஸ்டிரைக்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தப் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. போதிய போக்குவரத்து வசதியில்லாமல் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நலன்கருதி, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடையை நீதிமன்றம் பிறப்பித்தது. இருப்பினும், ஊழியர்கள் வேலைக்குச் செல்லவில்லை. 
 இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்த பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்திலிருக்கும் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டதாக, தொழிற்சங்கம் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார். 
 மேலும் அவர் கூறுகையில், "போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஊழியர்களின் தரப்பைக் கேட்காமல், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். 
 அதாவது, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கடந்த 7 ஆண்டுகளாகப் பிடித்தம்செய்த பிஃஎப் பணத்தை போக்குவரத்துக் கழகம் முறையாக பி.எஃப் நிறுவனத்திடம் செலுத்தவில்லை. அதுபோல, எல்.ஐ.சி பணத்தையும் செலுத்தாதால் பாலிசிகள் காலாவதியாகிவிட்டன. இந்த வகையில், கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 2,600 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.  மேலும், போக்குவரத்துக் கழக வளர்ச்சிக்காக உழைத்த டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு வழங்கவேண்டிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

பஸ் ஸ்டிரைக்

 
 டிரைவர், கண்டர்கள், தங்களின் பிள்ளைகளின் திருமணம், கல்விக்காக பி.எஃப். அலுவலகத்திலிருந்து கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. பி.எஃப் சட்டத்தில் ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்த பணத்தை ஒரு மாத காலத்துக்குள் செலுத்திவிட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதுவே, தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் பி.எஃப் பணத்தைக் கையாடல் செய்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம், ஊழியர்களின் பி.எஃப். பணத்தை செலுத்தாமல் இருக்கிறது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்தப் பணத்தை செலுத்திவிட்டாலே, போக்குவரத்துக் கழகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும். 
 இதுபோல, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான நியாயமான காரணங்களை முன்வைத்தோம். அதற்கு நீதிபதி, 'பஸ்கள் இயக்கப்படாததால் நீதிபதியோ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ, ஏன் போக்குவரத்துக் கழக அதிகாரிகளோ பாதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, அரசு தரப்பில் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வாகனத்தை இயக்க டிரைவர்கள் வரவில்லை என்றால்கூட மாற்று டிரைவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அரசு பஸ்ஸை நம்பி தினக்கூலித் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என ஏராளமானவர்கள் உள்ளனர். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்றம் குரல்கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கருதியே வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் பிறப்பித்தது. 
 போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்த பணத்தை உடனடியாக அரசு பி.எஃப், எல்.ஐ.சி அலுவலகங்களில் செலுத்த வேண்டும். மேலும், ஸ்டிரைக்கைக் காரணம் காட்டி ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு, எங்களின் போராட்டத்துக்குக்  கிடைத்த இடைக்கால வெற்றியாகப் பார்க்கிறோம். ஸ்டிரைக் தொடர்வதுகுறித்து ஆலோசித்துவிட்டு அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்