வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/01/2018)

கடைசி தொடர்பு:16:40 (08/01/2018)

காந்தி, விவேகானந்தர் வேடமணிந்தவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸ்!

தனிநபர் கழிப்பிட திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்த புகார் அளிக்கக் காந்தி மற்றும் விவேகானந்தர் வேடம் அணிந்து தேசியக்கொடியை ஏந்தி தாரை தப்பட்டை அடித்துக்கொண்டு வந்த பாரதியார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளைக் காவல்துறை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

pudukottai

இது குறித்த புகார் அளிக்க வந்த தணிகைவேலன் நம்மிடம் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரண்டபள்ளி, பூதனூர், பீராஜகனூர், வெப்பாலம்பட்டி, சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, கல்லியூர், குள்ளம்பட்டி, வேங்கனூர், போச்சம்பள்ளி, ஜம்புகுடபட்டி ஆகிய ஊராட்சிகளில் தூய்மைப் பாரத இயக்கம் தனிநபர் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள தனிநபர் கழிப்பிடத் திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. 

அரசு கொடுத்துள்ள உயரத்தைவிட மிகக் குறைவாக கழிப்பிட கட்டடம் கட்டியுள்ளனர். 3 அடி இருக்க வேண்டிய கழிவுநீர் தொட்டி 2.5 அடியாகக் குறைத்து கட்டியுள்ளனர். இது மட்டுமல்லாமல் இன்னும் பல கிராமங்களில் தனிநபர் கழிப்பிடம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே உள்ளது. இது குறித்து பர்கூர் பி.டி.ஓ-விடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் விசாரிக்கவும் இல்லை, உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை. அதனால்தான் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் காந்தி மற்றும் விவேகானந்தர் வேடம் அணிந்து தாரை, தப்பட்டை அடித்துக்கொண்டு புகார் மனு அளிக்க வந்தோம். ஆனால், போலீஸார் எங்களை அனுமதிக்கவில்லை. ஒருவரை மட்டும் சென்று மனு அளிக்க அனுமதி கொடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.