வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (08/01/2018)

கடைசி தொடர்பு:12:21 (29/06/2018)

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறது ஆட்டோ தொழிலாளர் சங்கம்!

கடந்த ஐந்தாவது நாளாகத் தமிழகம் தழுவிய அளவில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், `தமிழகத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கவேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதன் மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜியைத் தொடர்புகொண்டு பேசினோம். "தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து தினங்களாக அமைதியான முறையில் ஜனநாயக முறைப்படி போராடி வருகிறார்கள். 2016-ல் பேசி முடிக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உரிய  காலத்தில் பேசிமுடிக்காமல் அரசுதான் காலம் கடத்தி வந்தது. போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், பல்வேறு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரசை தொடர்ந்து வலியுறுத்தி  வந்தனர்.

போராடும் தொழிலாளர்களின் உணர்வை ஆளும் அரசாங்கம் இரும்பு இருதயம் கொண்டு கண்டு கொள்ள மறுத்தபோது, வேலைநிறுத்தம் செய்ய முறைப்படி நோட்டீஸ் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்டது. வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்த பிறகும் அரசும், அதிகாரிகளும் உரிய விதத்தில் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தியும் பிரச்னையை இழுத்தடித்தும் வந்தனர். போக்குவரத்து தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எவ்வளவு பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு பொறுமை காத்து வந்திருக்கின்றனர். அரசும் அதிகாரிகளும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் திட்டமிட்டு வேலைநிறுத்தத்தை இவர்கள் மீது திணித்துள்ளனர். திணித்தது மட்டுமல்ல, நீதிமன்றம் மூலமும், அரசின் மூலமும் கடுமையான அடக்குமுறைகளை ஏவ காரணமாகவும் அதிகாரிகள் இருக்கின்றனர். கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து பேசி முடிப்பதற்கு பதிலாக, அடக்குமுறை அணுகுமுறையைக் கையாண்ட அதிகாரிகளின் செயலையும் அரசின் மெத்தனத்தையும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுமக்கள் படும் சிரமங்களுக்கு அரசின் செயல்பாடு குறைவின்மையும் அக்கறையின்மையுமே காரணமாகும். ஒருபோதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காரணமில்லை என்பதே உண்மை. எனவே, தமிழக அரசு அடக்குமுறையைக் கைவிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தை சென்னையில் நடைபெற்ற ஆட்டோ தொழிலாளர் சம்மேளம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறோம்" என்றார்.