நெல்லை கலெக்டர் அலுவலகத்தைப் பரபரக்க வைத்த கொள்ளை!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல பலத்த சோதனை நடைபெற்று வரும் நிலையில், செயின் பறிப்பு நிகழ்ந்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

செயின் பறிப்பு - மூதாட்டி ஜெயமணி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கந்தவட்டிக் கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்பவர், தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் கண் எதிரிலேயே நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 12 வாயில்களில், 10 வாயில்கள் நிரந்தரமாக அடைக்கப்பட்டன. இரு வாயில்கள் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும், பலத்த சோதனைக்குப் பின்னரே ஆட்சியரிடம் மனு அளிப்பவர்கள்கூட அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 

இந்த நிலையில், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் வந்திருந்தார். முதியோர் ஓய்வூதியம் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்த அவர், கூட்ட அரங்கினுள் சென்றுவிட்டு வெளியே வந்தபோது அவர் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்டத்தில் அவரது நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றது தெரியவந்தது. செயினைப் பறிகொடுத்த அவர் பரிதவித்தது சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. 

பாதிக்கப்பட்ட மூதாட்டி

கண்ணீருடன் அவர் காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடுமையான கட்டுப்பாடுகள் மிகுந்த நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!