`ஓட்டு உரிமையைத் தவிர வேறெந்த உரிமையும் இல்ல' - கலெக்டர் அலுவலகத்தைப் பதறவைத்த இளைஞர்

தேனி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அந்த வளாகமே பரபரப்பானது.

ஆண்டிபட்டி அருகே உள்ள T.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கொண்டமநாயக்கன்பட்டி. இந்தக் கிராமத்தின் அருகே செக்போஸ்ட் காலனியில் வசிக்கும் வேல்முருகன் (27) என்ற இளைஞன், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு கையில் தீப்பந்தத்தோடு, கழுத்தில் கயிறோடு நுழைந்தார். இதைக்கண்ட பத்திரிகையாளர்கள் விரைந்து சென்று அவரிடம் பேசி சமாதானம் செய்து கையில் இருந்த தீப்பந்தத்தைப் பிடிங்கினர்.

இதைப் பார்த்த போலீஸார் அந்த இளைஞரைப் பிடித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல், ஓட்டுபோடும் உரிமையைத் தவிர வேறெந்த உரிமையும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஊர் மக்களாகச் சேர்ந்து கழிப்பறை, சாலை வசதி செய்ய முற்பட்டாலும் அதை அதிகாரிகள் தடுத்துவிடுகிறார்கள்.

தண்ணீர், சாலை, கழிப்பறை, இவ்வளவு ஏன் எங்களுக்கு என்று சுடுகாடுகூட கிடையாது. சுந்திர இந்தியாவில் அகதிகளாக வாழ்கிறோம்" என்றார். மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பானது. பத்திரிகையாளர்கள் விரைந்து சென்று தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த இளைஞரைக் காப்பாற்றிய செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். சம்பந்தப்பட்ட அந்த இளைஞரின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று கலெக்டர் உடனே ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!