காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஜெயேந்திரருக்கு பஞ்ச முத்திரை மரியாதை!

சங்கரராமன் கொலைக்குப் பிறகு இரண்டாவது தடவையாக ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இன்று வந்த ஜெயேந்திரருக்கு பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த ஜெயேந்திரரைச் சங்கரராமனின் மருமகன் வரவேற்றார்.

ஜெயேந்திரர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் கோயில்வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக வரதராஜ பெருமாள் கோயில் கணக்காளர் கணேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். சங்கரராமன் கொலைக்குப்பின் கடந்த 2014-ம்  ஆண்டு ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தார்.

இந்தநிலையில் இரண்டாவது தடவையாக இன்று வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல்லக்கில் வந்தார் ஜெயேந்திரர். அவரை கொலைசெய்யப்பட்ட சங்கரராமனின் மருமகனும் கோயில் மேலாளருமான கண்ணன் வரவேற்றார். ஜெயேந்திரருக்கு 14 கால் மண்டபத்தில், ராஜ்ய சன்யாசிகளுக்கு வழங்கப்படும் பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டு, பின்னர் கோயிலின் ராஜகோபுரத்தின் அருகில் பூரணக்கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற ஜெயேந்திரர் வரதராஜ பெருமாளைத்  தரிசனம் செய்தார்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!