மெட்ராஸின் 'அடல்ட்ஸ் ஒன்லி' லைப்ரரி! சென்னை பிறந்த கதை! - பகுதி - 6

கன்னிமாரா நூலகம்

தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

லக உருண்டையில் பரவிக் கிடக்கும் நாடுகள், அவற்றைக் கட்டியாண்ட அரசர்கள், அவர்களை சுற்றிச் சுழன்ற சூழ்ச்சிகள் என விறுவிறு வரலாறு புத்தகங்களை உள்ளடக்கியவை நூலகங்கள். அந்த நூலகங்களுக்கும் சில நேரங்களில் இப்படி விறுவிறுப்பான வரலாறுகள் இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாக, மெட்ராஸ் என்ற பொட்டல் நிலத்தில் புத்தி வளர்க்கும் நூலகங்கள் புகுந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

17-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியினர் மெட்ராஸில் காலடி வைத்தபோது, பொழுதுபோக்கவோ, அறிவை வளர்த்துக் கொள்ளவோ பெரிதாக எந்த வசதி வாய்ப்புகளும் இல்லை. முதன்முதலில் 1661-ஆம் ஆண்டு, நமக்கு ஒரு நூலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயர்கள்  சிலருக்குத் தோன்றியது. இதற்கான முதல் முயற்சியைக் கையில் எடுத்தார் வில்லியம் வைட்ஃபீல்ட் என்ற பாதிரியார். அப்போதைய மெட்ராஸ் ஆளுநர், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரிடம் கலந்து பேசிய வில்லியம், அப்படியே கொஞ்சம் நிதி வசூலித்து... அதில் காலிகோ துணிகளை வாங்கி இங்கிலாந்து செல்லும் கப்பலில் ஏற்றி அனுப்பினார். அந்தத் துணியை விற்றுக் கிடைக்கும் பணத்தில், லண்டனிலிருந்து புத்தகங்களைத் தருவிக்க வேண்டும் என்பதுதான் அவரின் திட்டம். அதன்படி, சுமார் 28 பவுண்டுகள் விலை மதிப்புள்ள புத்தகங்கள் இங்கிலாந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் புத்தகங்கள் கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்காக அடுக்கிவைக்கப்பட்டன. இப்படித்தான் மெட்ராஸின் முதல் நூலகம் பிறந்தது.

மெள்ளமெள்ள இந்த நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. புத்தகம் வேண்டுவோர் ஒரு பகோடா பணம் (அப்போது புழக்கத்திலிருந்த நாணயம்) கொடுத்து தேவையான புத்தகத்தை இரவல் பெற்றுச் செல்லலாம். லாக்கையர் (Lockyer) என்ற பயணி 1703-ஆம் ஆண்டு சென்னைக் கோட்டைக்கு வந்திருந்தபோது இங்கிருந்த நூலகத்தைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது சுமார் 438 பவுண்டுகள் மதிப்புள்ள புத்தகங்களைக் கொண்டதாகக் கோட்டை நூலகம் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், இந்த நூல்கள் முறையாக வகைபிரித்து அடுக்கிவைக்கப்படவில்லை. எனவே, தேவையான புத்தகத்தை சீக்கிரம் தேடி எடுப்பதே பெரிய சவாலாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு 1720-இல் ஒரு பாதிரியார் தீர்வு கண்டிருக்கிறார். எந்தப் புத்தகம் எங்கிருக்கிறது என்பதை அறியும் வகையில் சிறப்பான கேட்லாக் ஒன்றைத் தயாரித்து அசத்தியிருக்கிறார். இதனால் மகிழ்ந்துபோன ஆளுநர், அந்தப் பாதிரியாருக்கு பல்லக்கில் பயணிக்கச் சிறப்பு அனுமதி அளித்ததாக ஆங்கிலேய ஆவணங்கள் சொல்கின்றன.

இப்படிப் பார்த்துப் பார்த்து வகைபிரித்த புத்தகங்களை, வடிவேலுவை கோவை சரளா புரட்டிப் புரட்டி எடுத்ததைப்போல, 1746-இல் கோட்டையை முற்றுகையிட்ட பிரெஞ்சுப் படைகள் மூலைக்கொன்றாகச் சிதறடித்தன. மீண்டும் மெட்ராஸ், ஆங்கிலேயர் வசம் வந்ததும்... மறுபடியும் நூலகம் சீராக்கப்பட்டது. லண்டனிலிருந்து ஆண்டுதோறும் புத்தகங்களை அனுப்பும் வழக்கம் ஒரு காலத்துக்குப் பிறகு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனிடையே, புத்தக ருசி கண்ட வாசிப்பாளர்களின் வசதிக்கு ஏற்ப கோட்டைக்கு வெளியிலும் நூலகங்கள் முளைக்க ஆரம்பித்தன. 

கன்னிமாரா நூலகம்

1847-ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள், அரசு ஓரியன்டல் மானுஸ்கிரிப்ட் லைப்ரரி தொடங்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகளும், அச்சடிக்கப்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருந்தன. இங்கிருந்த கையெழுத்துப் பிரதிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. புத்தகங்களை இங்கேயே உட்கார்ந்துதான் படிக்க வேண்டும். சிறப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு சில புத்தகங்களும், கையெழுத்துப் பிரதிகளும் மட்டும் இரவல் தரப்பட்டன.

சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர் மெட்ராஸில் ஆரம்பிக்கப்பட்டது அடல்ட்ஸ் ஒன்லி லைப்ரரி. பேரைக் கேட்டதும் எசகுபிசகாகக் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடாதீர்கள். நம்ம கன்னிமாரா லைப்ரரிதான் அது. 1860-களில் கேப்டன் ஜெசி என்பவர் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்துக்குள் ஒரு சிறிய நூலகம் ஒன்றை அமைத்தார். இதைப் பெரிதாக விரிவுபடுத்தி இன்னும் அதிகமானோர் பயனடைய வகை செய்ய வேண்டும் என விரும்பிய அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் லார்ட், கன்னிமாரா பெரிய நூலகம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கிவைத்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் 22, 1890-இல் நடைபெற்றது.

நீண்ட இழுபறிக்குப் பின், பணிகள் எல்லாம் ஒருவழியாக முடிந்து, 1896-ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் என்ற முறையில் லார்ட் கன்னிமாராவின் (அதற்குள் அவர் பதவியிலிருந்து போய் அடுத்த ஆளுநரே வந்துவிட்டார்) பெயரே நூலகத்திற்கு வைக்கப்பட்டுவிட்டது. ஆரம்ப காலத்தில் தேவையானோர் வந்து படித்துச் செல்லும் வசதி மட்டும்தான் இங்கு இருந்தது. பின்னர் 1930 முதல் புத்தகங்களை இரவல் கொடுக்கும் வழக்கம் தொடங்கியது. 17 வயது நிரம்பியவர்களுக்கு மட்டும்தான் புத்தகங்கள் இரவல் தரப்படும். அதனால்தான் அதை அடல்ட்ஸ் ஒன்லி லைப்ரரி என்று சிலர் வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்கள். 17 வயது பூர்த்தியடைந்தவர் எனக் கல்லூரி முதல்வர், பேராசிரியர், கார்ப்பரேஷன் கவுன்சிலர், மாஜிஸ்ட்ரேட் ஆகிய யாரிடமாவது சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ரூ.20 முன்பணம் கட்டினால், 3 புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்கப்படும். அந்தப் புத்தகங்களை 15 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒருவேளை, புத்தகத்தைத் தொலைத்துவிட்டால்... அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கி நூலகத்துக்கு அளிக்க வேண்டும். இதுதான் அன்றைய கன்னிமாரா நூலகத்தின் சட்டத்திட்டம். 

கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா நூலகம் வெள்ளிக்கிழமை தவிர, ஆண்டின் மற்ற அனைத்து நாள்களிலும் மக்கள் சேவை ஆற்றி வந்திருக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கும் நூலகம், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மாலை 5.30 மணி வரையிலும், மற்ற மாதங்களில் மாலை 6 மணி வரையிலும் திறந்திருப்பது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. புத்தகங்கள் தவிர முக்கியமான நாளிதழ்கள், வார ஏடுகள், மாதப் பத்திரிகைகள் அனைத்தும் கன்னிமாரா நூலகத்துக்கு வந்துவிடும். இவற்றுக்கான பிரத்யேகப் பகுதியில் வாசகர்கள் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பத்திரிகைகளை வாசித்த காலங்களுக்கு கன்னிமாரா சுவர்களே சாட்சி.

இவை தவிர, சென்னைப் பல்கலைக்கழக லைப்ரரி, தியோசபிக்கல் சொசைட்டிக்குள் அமைந்திருந்த அடையார் லைப்ரரி, மைலாப்பூர் ராணடே லைப்ரரி, ரிப்பன் மாளிகையில் இருந்த சுங்குவார் முனிசிபல் லைப்ரரி, நுங்கம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி லைப்ரரி ஆகியவை அன்றைய மெட்ராஸ் புத்தகப் பிரியர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கின. 1929 முதல் 1934 வரை அறிஞர் அண்ணா கல்லூரியில் படித்த காலத்தில், நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் படிப்பதைப் பழக்கமாக வைத்திருந்தார். தங்கசாலையில் இருந்த பண்டிதன் ஆனந்தம் நூலகம், சென்னை செயின்ட் சேவியர் தெருவில் இருந்த மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகிய மூன்றும்தான் அவர் அதிகம் அறிவுக் கொள்முதல் செய்த இடங்கள். இந்த மூன்று நூலகங்களிலும் அண்ணா படிக்காத நூலே இல்லை என்று சொல்வார்கள். இது சற்றே மிகையாகத் தோன்றினாலும் சாதாரண அண்ணாவை, அறிஞர் அண்ணாவாக புடம்போட்டவை இந்த நூலகங்கள்தாம். அதனால்தானோ, என்னவோ தெரியவில்லை. தமிழகத்தின் பல இடங்களில் அண்ணாவுக்குப் புத்தகம் படிப்பதைப் போன்று சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்.

புத்தகங்களுடனான அண்ணாவின் அந்தப் பந்தம் மரணத்துக்குப் பிறகும் தொடர்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக ஓங்கி உயர்ந்து, அறிவுச் சுடரை பரப்பிக்கொண்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!