வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (09/01/2018)

கடைசி தொடர்பு:07:56 (09/01/2018)

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம்... சென்னைவாசிகள் கவனத்துக்கு! #HouseLifting

பள்ளமான பகுதிகளில் வீடு கட்டியவர்களின் தலையாய பிரச்னை, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுவதுதான். புதிய கட்டடம் கட்ட அதிக செலவு ஆகும் என்பதால், அவற்றை லிஃப்டிங் முறையில் உயர்த்திக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் முத்துலிங்கம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வீட்டில் உள்ளே புகுந்து விடுகிறது. மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமான செலவு காரணமாக தனது வீட்டை பில்டிங் / ஹவுஸ் லிஃப்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்தி வருகிறார்.

முத்துலிங்கத்திடம் பேசினோம், “ஓரிக்கையில் மிலிட்டரி ரோட்டில் பள்ளம் இருக்கும் பகுதியில் எங்கள் வீடு அமைந்துள்ளது. இரண்டு நாள் மழை பெய்தாலே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடும். மழை பெய்தால் வீட்டில் இருக்கவும் முடியாது. வெளியே செல்லவும் முடியாது. இடித்துக் கட்டினால் 15 லட்சத்திற்கும் மேல் செலவாகும். அதோடு வீடு இடிப்பதற்கும் கூடுதல் செலவாகும். தற்போது மணல் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்டர்நெட்டில் பார்த்துவிட்டு வீட்டை உயர்த்தினார்கள். நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு லிஃப்டிங் முறையில் வீட்டை உயர்த்த திட்டமிட்டோம்.” என்கிறார்

பில்டிங் லிப்டிங் முறையில் உயர்த்துதல்

அந்த வீட்டில் பில்டிங் லிஃப்டிங் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவரிடம் பேசினோம். “சென்னையில் 1000 சதுரஅடியில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் பத்திலிருந்து பதினைந்து லட்சரூபாய் வரை செலவாகும். ஆனால் அதே அளவுள்ள ஒரு பில்டிங்கை லிஃப்டிங் தொழில்நுட்பத்தில் உயர்த்துவதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் போதும். இதனால் கட்டட உரிமையாளர்களுக்கு 80 சதவிகிதம் வரை செலவு மிச்சமாகிறது. இன்றைய சூழலில் மணல் தட்டுப்பாடு அதிகம். அதுபோல் கட்டடத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்துவிட்டது.

வீடு லிஃப்டிங்

முதலில் ஹரியானவில்தான் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் என்னுடைய சொந்த வேலை காரணமாக ஹரியானா சென்றிருந்தேன். அப்போது இந்த வேலை செய்பவருடன் எனக்கும் நட்பு ஏற்பட்டது. அவருடன் இரண்டு வருடம் சேர்ந்து இந்தத் தொழிலை செய்துவந்தேன். பிறகு நானே சுயமாக லிஃப்டிங் தொழிலை செய்ய தொடங்கினேன். ஏழு வருடத்திற்கு முன் சென்னைக்கு வந்த போது இதே பிரச்னை காரணமாக வெள்ளத்தில் வீடுகள் மூழ்குவதை பார்த்தேன். இதனால் வீடு லிஃப்டிங் செய்து கொடுப்பதற்கு விளம்பரங்கள் கொடுத்தேன். அடுத்த ஆறு மாதத்திலிருந்து ஆர்டர் கிடைக்க தொடங்கியது. அப்போதிலிருந்து இந்த வேலையைச் செய்து வருகிறேன். இதுவரை நாங்கள் வேலை செய்த வீடுகளில் லிஃப்டிங் முறையால் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை.

வீடு லிஃப்டிங்

ஒரு கட்டடத்தை வேலைக்கு எடுத்தால் கட்டட உரிமையாளருக்கும் எங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடுவோம். ஒப்பந்தத்தின்படி 45 நாள்களுக்குள்  வேலையை முடித்துக் கொடுத்துவிடுவோம். கட்டடத்தின் சுவர்ப் பகுதியில் இரண்டரை அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து வீட்டின் அஸ்திவாரத்திலிருந்து ஜாக்கி (பளு தூக்கி) செட்டிங்கை ஆரம்பிப்போம். இரண்டடி அகலத்திற்கு சுவரை துண்டாக்கி விட்டு 3 ஜாக்கியை முதலில் வைப்போம். அடுத்தடுத்து, இரண்டடியாக சுவரை துண்டாக்கி, ஜாக்கி  வைத்துக் கொண்டே செல்வோம். கடைசியில் அந்த முழு கட்டடத்தையும் எங்கள் ஜாக்கி தாங்கிப்பிடிக்கும். அடுத்ததாக ‘ப’ வடிவிலான இரும்பை 10 அடிக்கு ஒன்றாக வைத்துவிடுவோம். அதன்பிறகு அனைத்து இரும்புகளையும் வெல்டிங் செய்து இணைத்துவிடுவோம். பிறகு தண்ணீர் மூலமாக பில்டிங் சமமாக இருக்கிறதா என சோதனை செய்வோம். ஒவ்வொரு ஜாக்கிக்கும் ஒருவரை நிறுத்துவோம். முழுவதும் வடமாநிலத்தவர்கள் என்பதால் ஹிந்தியிலே சொல்லச் சொல்ல அவர்கள் ஜாக்கியைக் கொண்டு உயர்த்துவார்கள். ‘ஏக் நம்பர் லால்பே… தோ நம்பர் சித்தேபே…’ என 12 முறை சொல்வேன். அதன் பிறகு சரியாக தூக்கியிருக்கிறார்களா என்பதை சரிபார்ப்போம். 120 முறை உயர்த்தினால், நான்கு இன்ச் மட்டுமே பில்டிங் உயரும். ஒவ்வொரு பன்னிரண்டு முறைக்கும் அதை சரிபார்த்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒன்றரை அடி உயர்த்துவோம்.

காஞ்சிபுரத்தில் வீடு லிஃப்ட்டிங்

நாங்கள் 250 கட்டடங்களுக்கு மேல் உயர்த்தியுள்ளோம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஏற்கெனவே சுவரில் விரிசல் இருந்தால் அதை கட்டட உரிமையாளரிடம் மார்க் செய்து கொடுத்துவிடுவோம். 1000 சதுர அடிக்குச் சுமார் 25 பேர் வேலை செய்ய வேண்டும். 15 நாளிலிருந்து இருபது நாள் வரை இதற்கு தேவைப்படும். 8000 சதுரஅடி கட்டடம் வரை உயர்த்திக் கொடுத்துள்ளோம். ஆந்திரா கேரளா உள்ளிட்ட இடங்களில் இதை செய்து வருகிறார்கள். சென்னையில் இது போன்று பல கட்டடங்களை உயர்த்தி வருகிறார்கள். சென்னையில் பல தாழ்வான இடங்களில் வீடுகட்டியவர்களுக்கு, மழைக்காலங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் சென்னைப் பகுதியில் அதிக அளவில் இந்த முறையைக் கொண்டு கட்டடங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்