வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (08/01/2018)

கடைசி தொடர்பு:18:35 (08/01/2018)

தயங்கும் போலீஸ்! - அரசியல் செல்வாக்கால் மாணவர்களை ஆட்டிப்படைக்கும் கஞ்சாக்காரர்

பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சீரழிக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்கக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதுமக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில், ’’நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 12 மற்றும் 18-ம் தேதிகளில் உங்களிடம் மனு அளித்து, அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மீண்டும் உங்களிடம் இந்த மனுவை அளிக்கிறோம். விக்கிரமசிங்கபுரத்தில் சங்கரபாண்டியபுரம் தெருவில் வசிக்கும் செந்தில்வேல்முருகன் தனது குடும்பத்துடன் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அதனால் எங்கள் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் அவலம் நடக்கிறது. இந்தப் போதைப் பழக்கத்தால் இளைஞர்கள், மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படும் அவலமும் நடக்கிறது. 

கஞ்சா விற்பனை காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கஞ்சா விற்பனையாளரான செந்தில்வேல்முருகனுக்கு அரசியல் செல்வாக்கும் பண பலமும் இருக்கிறது. அவர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் 15-வது வார்டு செயலாளராக இருப்பதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவே தயங்குகிறார்கள். அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் கஞ்சா விற்பனையைத் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை முற்றிலுமாகத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.