வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (08/01/2018)

கடைசி தொடர்பு:19:34 (08/01/2018)

கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்த போலீஸின் `தூண் நோட்டீஸ்'!

"போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் இன்று நடந்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்குப் போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. இதைக் கண்டித்து நாளை போலீஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என்றார் புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கவிவர்மன்.

தமிழகம் முழுவதும் ஐந்து நாள்களாகத் தொடர்ந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அந்தவகையில், தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பம் முதலே களத்தில் போராடி வருகிறது. புதுக்கோட்டையிலும் அந்தக் கட்சியின் சார்பாக, இன்று திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகேட்டு, இரண்டு தினங்களுக்கு முன்பாக மனு கொடுக்கப்பட்டது. மனு பரிசீலனையில் இருந்தநிலையில்,நேற்று அனைத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், 'போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எந்தக் கட்சிகளோ அமைப்புகளோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம்' என்பதே அது. அந்தவகையில், புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து, காவல்துறை சார்பாகக் கடிதம் தயார் செய்யப்பட்டு, அதைக் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தூண் ஒன்றில் நேற்று (7.1.2018) போலீஸாரே ஒட்டிச்சென்றுவிட்டார்கள். இதனால், இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கைவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனாலும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை, மாவட்டக் காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கவிவர்மனிடம் பேசினோம். "போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வேலைநிறுத்தம் நடந்துவரும் சூழலில், அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காரணத்தைத் தேடிப்பிடித்து எங்களுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது மாவட்டக் காவல்துறை. இது என்ன காவல்துறையா அல்லது ஏவல் துறையா. தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லை சர்வாதிகாரம் நடக்கிறதா. ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது. இவர்களின் எதேச்சாதிகார போக்கைக் கண்டித்து நாளை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என்றார் ஆவேசத்துடன்.