`தெருவில் நிற்கிறார்கள் விவசாயிகள்; நிலத்தைக் கொடுங்கள்' - அரசை எச்சரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்

அரியலூர், பெரம்பலூர் இரு மாவட்டங்களும் ஆலைகள் வரும் என்று நிலத்தைக் கொடுத்த விவசாயிகள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களுக்கு உடனே நிலங்களைக் கொடுக்க வேண்டும் இல்லையேல் களத்தில் இறங்கும் இந்திய கம்யூனிஸ்ட் என்று அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாவட்ட மாநாடு நடந்தது. செயங்கொண்டம், பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் தீரன் நகரில் நடந்த மாநாட்டுக்கு மாவட்டக் குழு உறுப்பினர்கள் தியாகராஜன், மகேஸ்வரி தலைமை வகித்தனர். மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் இளமுருகன் கொடியேற்றினார். இதில் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை, எறையூர், பெண்ணக்கோணம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக, விவசாயிகளின் சாகுபடிநிலம் 3,400 ஏக்கர் நிலங்களை அரசால் கையகப்படுத்தப்பட்டு, 8 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பணிகளும் நடக்காமல் புதர் மண்டிக்கிடக்கிறது. இந்நிலையில், தரிசாகக் கிடக்கும் நிலங்களை, பெரம்பலூர் மாவட்டத்தில் நிலமில்லா விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலா 2 ஏக்கர் வீதம் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் அருகே பச்சைமலை அடிவாரத்தில் மயிலூற்று அருவி நீரைத்தடுத்தும், மலையாளப்பட்டி அருகே கல்லாற்று நீரைத்தடுத்து சின்னமுட்லு பகுதியிலும் கிருஷ்ணாபுரம், வெண்பாவூர் அருகே கல்லாற்றின் குறுக்கேயும் புதிய அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சாக்கு போக்கு சொல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரெங்கராஜ் நன்றி கூறினார்.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மாநாட்டில், மாணவர்களின் கல்விக் கடனை நிபந்தனையின்றி ரத்து செய்திட வேண்டும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயத்திட வேண்டும், ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களை இழப்பீட்டோடு விவசாயிகளிடம் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும், அரசு நிலங்களில் வீடுகட்டி குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா  வழங்கவும், ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் வரத்துவாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தீர்மானமாக நிறைவேற்றபட்டன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!