காலாவதியான பஸ்ஸை நாங்கதான் ஓட்ட முடியும்! கலகலத்த போக்குவரத்துத் தொழிலாளி

சேலம்  கலெக்டர் அலுவலகத்தின் எதிரே தமிழக போக்குவரத்துத் துறையில் உள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.பி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., பாட்டாளி, விடுதலைச் சிறுத்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் பகுதில் கூடிய சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்தின் 'எதிரே ``எடுபிடி எடப்பாடி அரசே எங்களுக்கு நியாயம் வேண்டும்'’ என்ற கோஷத்தோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

தியாகராஜன்போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தியாகராஜனிடம் பேசினோம். ''சேலம் மண்டலத்தில் போக்குவரத்துத்துறை மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 கோடியும் தருமபுரி மண்டலத்தில் ஒரு கோடி ரூபாயும் வருமானம் வரும். ஆனால், கடந்த 4 நாள்களாகச் சேலம் மண்டலத்தில் ஒரு நாளைக்கு ரூ.30 லட்சமும் தருமபுரி மண்டலத்தில் ஒரு நாளைக்கு ரூ.16 லட்சமும் வருமானம் வந்திருக்கின்றன.

சேலம், தருமபுரி இந்த இரண்டு மண்டலத்தில் மொத்தம் 13,500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 98 சதவிகித ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், டிராக்டர், டிப்பர் லாரி, ஆன்புலன்ஸ், ஆட்டோ டிரைவர்கள், ஸ்கூல் வேன் ஓட்டக்கூடியவர்கள் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்துவந்து பேருந்தை இயக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். 

தமிழ்நாடு முழுவதும் 60 சதவிகித அரசுப் பேருந்துகள் காலாவதியானவை. ஒவ்வொரு பேருந்தும் 12 லட்சம் முதல் 15 லட்சம் கி.மீட்டர் ஓடியிருக்கிறது. இந்தப் பேருந்துகளை எங்களைத் தவிர மற்றவர்களால் ஓட்ட முடியாது. வீம்புக்கு ஓட்டச் சொல்லி, பொதுமக்களுக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்தால், ஆட்சியாளர்கள்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அதேநேரத்தில் சாலையில் அரசுப் பேருந்தைப் பார்த்தால் சற்று விலகி, கவனமாகச் செல்லுங்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!