போக்குவரத்துக் கழக ஊழியர்களின் அடுத்த டார்கெட் `சட்டமன்றம்' 

பஸ் ஸ்டிரைக்

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தொடருவதோடு, நாளை (9.1.2018) குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை மறுநாள் (10.1.2018) சட்டமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தாலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இதற்கிடையில் தொழிற்சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று விசாரித்து, 'ஸ்டிரைக் காரணமாகப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 
 இதையடுத்து, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுவரும் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை சேப்பாக்கம், சி.ஐ.டி.யு மாநிலக்குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இரண்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 தொழிற்சங்கங்களுடன் 4.1.2018-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே திரைமறைவில் ஒப்பந்தம் போட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தொழிலாளர் தனித் துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடந்த அரங்கத்துக்கு அருகிலேயே தங்க வைக்கப்பட்டார். 2.57 பெருக்கு காரணியை அரசு ஊழியர்களுக்குப் போலவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் பயன்படுத்தி புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டுமெனப் பேசி வந்த நிலையில், அரசு கூறிய 2.44 பெருக்கு காரணி என்று ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு சில சங்கங்களை ஏற்பாடுகளைச் செய்து ஒப்பந்தத்தை உருவாக்கியது. பெரும்பகுதி ஊழியர்கள் ஒப்புக்கொள்ளாத ஒப்பந்தம் தொழிலாளர் தலையில் திணித்த காரணத்தால் அரசே போராட்டத்தை உருவாக்கியது. போராட்டம் தொடங்கி மூன்று நாள்கள் முடிந்த நிலையிலும் தங்களது செயலை நியாயப்படுத்தியே அமைச்சர்கள் பேசிவருகின்றனர். 
 தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பேசி தீர்ப்பதற்குப் பதில், அரசு தேவையற்ற பிடிவாதத்தின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் துன்பங்களை உருவாக்கி வருகிறது. எவ்வித முன் அனுபவம் இல்லாதவர்களைப் பயன்படுத்தி பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் நடைபெற்றுள்ளன. விலைமதிப்பற்ற நான்கு உயிர்கள் பலியாகியுள்ளன. அரசின் இந்தநடவடிக்கையைக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு லட்டர் பேடுகளைச் சங்கங்களுடன் அரசு ஏற்படுத்திய சட்டவிரோத ஒப்பந்தத்தை ரத்து செய்து போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். 

பஸ் ஸ்டிரைக்

தமிழகத்தின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் மீது காவல்துறையை ஏவி போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 8.1.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதியளித்தது. ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் கூட்டமைப்பு வன்னமையாகக் கண்டிக்கிறது. 
 அரசின் மிரட்டல்கள், உண்மைக்குப் புறம்பான அறிவிப்புகள் ஆகியவற்றைப் புறக்கணித்து தொழிலாளர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் சங்க வேறுபாடின்றி போராடி வருவதைக் கூட்டமைப்பு பாராட்டுவதுடன் போராட்டத்தை மேலும், வலுப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறது. 

 தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர கோரிக்கைகளுக்கும் தீர்வு காணும் அடிப்படையில் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி 9.1.2018 அன்று மாலை அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்திட வேண்டும். 

 இந்தக் கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. எச்எம்எ", ஐ.என்.டி.யு உள்ளிட்ட 22 சங்கங்கள் பங்கேற்றன. நாளை மறுநாள் (10.1.2018) சட்டமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகத் தொழிற்சங்க  வட்டாரங்கள் தெரிவித்தன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!